×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி கோயில்களில் தமிழ், ஆங்கிலத்தில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை: கோயில் அலுவலர்கள் நடவடிக்கை

சென்னை: சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 74க்கும்  மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல தமிழகத்திலும்  ெகாரோனா அறிகுறியில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு  பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த  துண்டுபிரசுரமும் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும், பஸ், ரயில் நிலையங்களில் கிருமி நாசினி  தெளிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில்களில் கொரோனா தொடர்பாக பக்தர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கோயில்களில் வெளிமாநிலம் மற்றும்  வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்பதால், அதன்பேரில் அனைத்து கோயில்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிவிப்பு  பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் திருக்கோயில் வருகை தரும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு என குறிப்பிட்டு, அதில்,  கொரோனா வைரஸ் காய்ச்சல், நோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள், 24 மணி நேரம் உதவி மையம்  தொடர்பாக பல்வேறு தகவல்கள் அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை பக்தர்கள் பார்க்கும் வகையில்  கோயில்களில் 2 இடங்களில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : Temples ,Coronavirus Awareness Boards ,Vulnerability Awareness Board , Echoes ,corona virus ,Temples ,Tamil ,English,
× RELATED அம்மன் கோயில்களில் திருவிழா