×

நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துருபிடிக்கும் நிலையில் எக்ஸ்ரே கருவிகள்

திருச்சுழி: நரிக்குடியில் ரேடியோகிராபர் இல்லாததால் பல ஆண்டுகளாக எக்ஸ்ரே எடுக்கும் அறை மூடிக்கிடக்கிறது. இதனால் எக்ஸ்ரே கருவிகள் துருபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நரிக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் வெளிநோயாளிகளாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்கள், இருமல் போன்ற நோய்களுக்குநரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.

இங்கு பணியாற்றிய ரேடியோகிராபர் சில வருடங்களுக்கு முன் பணி மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். அன்று முதல் எக்ஸ்ரே எடுக்கும் அறை மூடுவிழா காணப்பட்டுள்ளது. இதனால் இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எக்ஸ்ரே கருவி பயன்படுத்தாமல் வீணாக உள்ளது. இதே நிலை நீடித்தால் கருவிகள் துருப்பிடித்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நரிக்குடி தவிர ஏ.முக்குளம், கட்டனூர் மற்றும் வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளும் இங்கு தான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.

நரிக்குடியில் எக்ஸ்ரே எடுக்க முடியாததால் இங்கிருந்து 25 கி.மீ தூரம் உள்ள அருப்புக்கோட்டை மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், வயது முதிந்த நோயாளிகள் பஸ் ஏறிச் சென்று எக்ஸ்ரே பார்க்க கடும் சிரமப்படுகின்றனர். அத்துடன், அங்கும் கூட்டமாக இருப்பதால் சிலர் கடன் வாங்கி தனியாரில் எக்ஸ்ரே எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே கருவியினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : X-ray machine rusting ,Nurikudi Primary Health Center ,Nerikudi Primary Health Center , At Nerikudi Primary Health Center X-ray tools for rusting
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...