×

கொரோனா அபாயம்: உடல்நலம் குன்றிய பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்!

மதுரை: உடல்நலம் குன்றிய பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிருங்கள் என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் தொடங்கி உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதன் தாக்கம் தற்போது இந்தியாவையும் பெரிதும் பாதித்து வருகிறது. ஆன்மிகம் தழைக்கும் நாடான இந்தியாவில் கோயிலிலும் திருவிழாக்களிலும் மக்கள் திரள் நிறைந்திருக்கும். மாசி மாதம், ஹோலிப் பண்டிகை என ஆன்மிக உற்சவங்களும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய மலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், திருமலைக்கு வருகிற பக்தர்கள் முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துவர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, நோயின் அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி திருமலைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல்நலம் குன்றிய பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிருங்கள் என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், காய்ச்சல், சளி, இருமல் இருக்கும் பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 நாட்களுக்கு கோயிலுக்கு வருவதை தவிருங்கள் என்று காரைக்கால் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



Tags : Coroner ,Meenakshiman ,pilgrims , Corona, Health, Pilgrims, Meenakshiamman Temple
× RELATED மீனாட்சியம்மன் கோயிலில் காணிக்கை ரூ.96 லட்சம்