×

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியது மத்திய பிரதேச அரசு!

போபால்: பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மீதான மோசடி வழக்கை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அக்கட்சியிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலகினார். அதுமட்டுமல்லாது, ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான கடிதத்தை, கவர்னர் மற்றும் சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

அவர் பாஜகவின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்கின் விசாரணையை மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு, மீண்டும் தொடங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை பலமுறை விற்று மோசடி செய்த வழக்கில் சிந்தியாவுக்கு தொடர்பு என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை மாநில பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர், சுரேந்திர ஸ்ரீவாஸ்தவா என்பவர் 2014ல் அளித்த புகார், விசாரிக்கப்பட்டு 2018ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அவர் மீண்டும் தற்போது புகார் அளித்ததால், அதன் உண்மைகளை விசாரிக்கிறோம் என கூறியுள்ளார். காங்கிரசில் இருந்து விலகியதால் 2014ல் போடப்பட்ட வழக்குக்கு மாநில அரசு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Jyotiraditya Scindia ,government ,Madhya Pradesh ,BJP. ,Entry , Jyotiraditya Scindia, Fraud case, Madhya Pradesh, Congress, BJP
× RELATED இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு...