×

ஐ.பி.எல் போட்டிகள் நடக்குமா ? இல்லையா? : விசா ரத்தால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ; ஐ.பி.எல் ஆட்சிமன்ற குழு அவசரமாக கூட முடிவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து ஐபிஎல் ஆட்சிமன்ற குழு நாளை மறுதினம் அவசரமாக கூடி முடிவெடுக்கவுள்ளது. 13வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை 9 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது உகந்தது அல்ல. போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என்று மராட்டிய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனைக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலுவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இந்த போட்டியை தள்ளிவைத்து மாற்று தேதியில் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு வர வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டு இருப்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு நாளை மறுதினம் அவசரமாக கூடி ஆலோசிக்க உள்ளது.இதன் முடிவில் ஐபிஎல் போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது தெரிய வரும்.   


Tags : tournaments ,IPL ,council committee , Corona, Virus, IPL, Cricket
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி