×

தனியார் நகைக்கடை காவலரிடம் துப்பாக்கி தோட்டா திருடிய வடமாநில வாலிபர் கைது: தோட்டா மாயம்

அண்ணாநகர்: அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் தற்போது அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்கென உரிய அனுமதியுடன் இவர் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை வைத்திருந்தார்.கடந்த 4ம் தேதி வழக்கம்போல் நகைக் கடையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 5 தோட்டாக்களை ஒரு பையில் வைத்து, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்திருந்தார். நள்ளிரவில் தோட்டாக்கள் இருந்த பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் அருள்மணி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தோட்டா வைத்திருந்த பையை ஒரு வாலிபர் எடுத்து செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. இதை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அண்ணா நகர் ஐயப்பன் கோயில் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடந்து வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாலிக் (22) என்பதும், சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் அருள்மணி பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அவரது துப்பாக்கி தோட்டாக்கள் நிரம்பிய பையை திருடி சென்றதாக மாலிக் ஒப்புக்கொண்டார். எனினும், அவரிடம் தோட்டாக்கள் இருந்த பை இல்லை. எனவே, அந்த பையை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறார், இவருக்கு பின்னால் கூட்டாளிகள் உள்ளனரா என மாலிக்கை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : North Indian ,jeweler , Private jeweler arrested
× RELATED கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு