×

அழிவில் இருந்து உப்பு உற்பத்தியை காக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: அழிவின் விளிம்பில் இருந்து உப்பு உற்பத்தி தொழிலை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக தமிழகத்தில் உப்பு உற்பத்தி கடந்த மூன்றாண்டுகளாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  உப்புத் தொழிலைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஏறத்தாழ 17,500 ஏக்கர் நிலம் மத்திய அரசின் குத்தகையின் கீழ் தொழில் நடந்து வருகிறது. இதில் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மத்திய அரசு இதற்கான குத்தகையை புதுப்பிக்க மாட்டோம் எனக் கூறியதன் காரணமாக பாதிக்கப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதுபோல, தூத்துக்குடியிலும் இதே நிலைமை ஏற்பட்டு இருப்பதால் அங்கேயும் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் உப்பு உற்பத்தி நடைபெறும் வேதாரண்யத்தில் 2018ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 6 லட்சத்து 8 ஆயிரம் டன்னில் இருந்து 2019ல் 2 லட்சத்து 85 ஆயிரம் டன்னாகவும், தூத்துக்குடியில் 14 லட்சம் டன்னில் இருந்து 10 லட்சம் டன்னாகவும், மரக்காணத்தில் 1 லட்சம் டன்னில் இருந்து 50 ஆயிரம் டன்னாகவும் உப்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உப்பு உற்பத்தியாளர்களின் இத்தகைய  அவலநிலைக்கு காரணம் குஜராத் மாநிலத்தில், வழங்கப்படுகிற சலுகைகள் எதுவும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக மின்சார மானியம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு, தொழில் காப்பீட்டுத் திட்டம் போன்ற எவையும் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது தமிழகத்தில் உப்பு உற்பத்தியை முழுமையாக அழித்து விடும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



Tags : KS Alagiri , Salt ,destruction,product, KSAlagiri request
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...