×

வீட்டில் தயாரித்தபோது விபரீதம் பட்டாசு வெடித்து சிதறி தாய், மகள் கருகி பலி: பெரியகுளத்தில் பரிதாபம்

தேனி: பெரியகுளத்தில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனர். வீடும் இடிந்து தரைமட்டமானது. தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை, வரதப்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (48). இவரது கணவர் கோபிநாத், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் ரவி (20), தேனியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மகள் நிவேதா (19)வுடன் கோயில் திருவிழா, விசேஷங்களுக்கு வீட்டிலேயே நாட்டு வெடிகளை முறையான அனுமதி பெறாமல் தயாரித்து விற்பனை செய்து வந்தார் பாண்டியம்மாள். நேற்று காலை 11.30 மணியளவில் இருவரும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வெடிமருந்து வெடித்ததில் பரவிய தீப்பொறி, வீட்டில் இருந்த பட்டாசுகளின் மீது பட்டது. இதனால் பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து தீப்பிடித்து ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் வெளியே ஓடினர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பெரியகுளம் போலீசார் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கால் துண்டான நிலையில் பாண்டியம்மாளின் உடலை மீட்டனர். பலத்த காயங்களுடன் கிடந்த நிவேதாவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* குழந்தைகள் 50 பேர் தப்பினர்
விபத்து நடந்த குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம், தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. தீயை உடனடியாக அணைத்து விட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டு 50 பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாண்டியம்மாளின் மகன் ரவி, வேலைக்கு சென்றதால் தப்பினார்.

Tags : kills , Fireworks explode, mother, daughter, karuki kills, periyakulam, pity
× RELATED பப்புவா நியூ கினியா நிலச்சரிவு...