×

போக்குவரத்து நெரிசல், விபத்தை தவிர்க்க நாகர்கோவிலில் புதிய கார் பார்க்கிங்?... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் நகரில் குறுகலான சாலைகள், பகலிலும் லாரிகளில் சரக்குகள் ஏற்றி இறக்குவதுடன், பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, டிராவல்ஸ்களின் வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அகலம் அதிகமுள்ள கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சாலையான கே.பி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் அனைத்து சாலைகளிலுமே பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்களின் கடைகள் முன்புள்ள தரைத்தளத்தை சாலையில் இருந்து பல அடி உயரத்திற்கு காங்கிரீட் தளம் அமைத்து உயர்த்தி உள்ளன.

 எனவே இந்த நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் சாலையின் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் என்கிற நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு செய்தார். முதல் கட்டமாக அகலமான கேபி சாலையில் செட்டிக்குளம் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலைக்கும் கடைகளின் முன்பக்க மட்டத்திற்கும் பல அடி உயர சிமென்ட் மேடைகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களிடம் கடைகளுக்கு வெளியே உள்ள முன்புற தளம் சாலை மட்ட அளவிற்கு இருக்கும் வகையிலும், நிறுவனங்களுக்கு வரும் இருசக்கர வாகனங்களை வணிக நிறுவனம் முன்பு நிறுத்தும் வகையில் உடனடியாக சிமென்ட் மேடைகளை அகற்றி அலங்கார தரைக்கற்கள் அமைத்துக்கொள்ள ஆணையர் அறிவுறுத்தினார்.

புதிய கார் பார்க்கிங்?
சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சி சார்பில் வேப்பமூடு மற்றும் வடசேரி  சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.  வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்துக்கழக மருத்துவமனை இருந்த இடம்  அகற்றப்பட்டு இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூட அனுமதிக்கப்படாமல் உள்ளது. கேப் சாலையில் கார் நிறுத்தம் அகற்றப்பட்ட பகுதியும், எதிரே உள்ள கடைகளின்  கார்கள் நிறுத்தும் நிலையமாக மாறிவிட்டது. வடசேரி சந்திப்பில்  கடைகள் அகற்றப்பட்ட இடமும் காலி மைதானமாக காட்சி அளிக்கிறது. எனவே சாலையை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்யும் வரை இங்கு இருசக்கர வாகனங்களுக்கு  இலவசமாகவும், கார்களுக்கு கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்தும் இடமாக அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேப் சாலையில் பள்ளங்கள்
கேப் சாலையில் கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல் இடலாக்குடி வரையிலான பிரதான சாலையில் இரு பக்கங்களிலும் ஒரு அடி அளவுக்கு பள்ளம் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்லவோ, எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடவோ முடியாமல் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே மாநகராட்சியாவது இந்த சாலையை சமன் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Nagercoil , Traffic congestion, Nagercoil, new car parking
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு