×

வண்ணத்துப்பூச்சி

நன்றி குங்குமம் முத்தாரம்

நாம் தினம் தினம் பார்த்துக்கொண் டிருந்த ஒரு பூச்சி இனம் இன்று காண்பதற்கே அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளாக மாறி யதும் நம் வாழ்க்கை முறை மாற்றமும்தான் அந்தப் பூச்சி அரிதான பூச்சியாக மாற மூல காரணம். ஆம்; வண்ணத்துப்பூச்சியைப் பற்றித்தான் சொல்கிறோம். பட்டாம்பூச்சி அல் லது வண்ணத்துப்பூச்சி அல்லது வண்ணாத்திப்பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக் கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன.

இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகு வதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டுகளித்து இன்புறச் செய்யும். முட்டையிலிருந்து, குடம்பி நிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும்  அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை.

பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை. உண்மைப் பட்டாம்பூச்சிகள் (பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும். சுமார் 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும்.

அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டி நீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீதான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப் படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம் பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதி களிலும் (இமயமலையிலும்), கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங் களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் பல்லுருத்தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாகவே காணப்படுகின்றன.

சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி) சில வகைப் பட்டாம்பூச்சிகள் ஒரு செல் உயிரினங்கள், ஈக்கள், எறும்பு கள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன. இதனுடைய வாழ்நாள் மிகக் குறைவு. இரண்டு நாள் முதல் இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிடுகிற அல்லது மற்ற உயிரினங்களுக்கு இரையாகும் பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. இப்படி பட்டாம்பூச்சிகளைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

தொகுப்பு: ஆர்.சந்திரசேகர்

Tags : It is no exaggeration to say that an insect species we have seen day by day has become a rarity today.
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...