×

கொரோனா வைரஸின் தாக்கம் சில நாடுகளை பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளும்..: ஐ.நா அறிக்கை

நியூயார்க்: கொரோனா வைரஸின் தாக்கம் சில நாடுகளை பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளும் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3136 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா சில நாடுகளை பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளும் என ஐ.நா கூறியுள்ளது. இதுகுறித்து, வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாடு தொடர்பான ஐ.நா. கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கொரோனா தாக்கத்தைக் குறைக்க உலக நாடுகளின் அரசுகள் செலவினங்களை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் சில நாடுகளை பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளும் என்றும், ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதத்துக்கு கீழே செல்லவும் வாய்ப்புள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள உலக அளவில் 2 லட்சம் கோடி டாலர் செலவு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : countries ,UN ,recession , Coronavirus, Economic slow down, UN
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...