×

கொரோனா பீதியில் கப்பலில் தவிக்கும் கோவை தம்பதி உள்பட 17 இந்தியர்கள்: அரசு மீட்க கோரிக்கை

கோவை: எகிப்து கப்பலில் சிக்கியுள்ள கோவையை சேர்ந்த தம்பதி உள்பட 17 இந்தியர்களை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் வனிதா (63). இவரது கணவர் ரங்கராஜ் (67). இவர்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதன்படி, வனிதா, ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலம் பகுதியை சேர்ந்த 17 பேர் சேலத்தை சேர்ந்த நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 29ம் தேதி எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். அங்கு, ஏ-சாரா என்ற கப்பலில் நைல் நதியை சுற்றி பார்க்க சென்றனர். அந்த கப்பலில் தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 171 பேர் இருந்தனர். அதில் பயணித்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பயணி உட்பட வெளிநாட்டினர் பலருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அவர்களை எகிப்து நாட்டினர் உடனடியாக கப்பலில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த கப்பலில் வனிதா, அவரின் கணவர் ரங்கராஜ் உள்பட 17 பேர் தத்தளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனிதா ரங்கராஜிடம் தொலைபேசியில் பேசியபோது அவர் கூறியதாவது: நாங்கள் 17 பேர் கடந்த 29ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு எகிப்திற்கு வந்தோம். எகிப்தில் பல இடங்களை சுற்றி பார்த்தோம். பின்னர், ஏ-சாரா கப்பலில் ஏறி கடந்த 4ம் தேதி பயணத்தை மேற்கொண்டோம். இரண்டு நாட்கள் நன்றாகத்தான் சென்றது. 6ம் தேதிதான், வெளிநாட்டை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் உடனடியாக  வெளியேற்றப்பட்டனர். பின்னர், எங்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதில், நெகடிவ் என ரிப்போர்ட் வந்தது. இதனை தொடர்ந்து எங்களை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தோம்.
ஆனால், அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறையின்படி 14 நாட்கள் கண்காணிப்புக்கு பின்புதான் கப்பலில் இருந்து வெளியே செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். எகிப்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். ஆனால், எவ்வித பலனுமில்லை. எங்களை கப்பலில் இருந்து வெளியே கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவில் இருந்து சேலம் வந்த வாலிபருக்கு காய்ச்சல்: சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஜனவரி 28ம் தேதி முதல், இதுவரை வந்த 108 பேர் வீடுகளிலேயே 28 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவிலிருந்து கடந்த 19 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் சேலம் வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த வாலிபருக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு அதிகாரி கேரள வாலிபருக்கு கொரோனா?
 கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து  மலேசியாவில் இருந்து கோவைக்கு வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவர் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து அவர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள சிறப்பு கொரோனா வைரஸ் வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு அதிகாரி: இத்தாலியிலிருந்து கடந்த மாதம் 29ம் தேதி மதுரை வந்த 35 வயது மதிக்கத்தக்க மத்திய அரசு அதிகாரி, தொண்டையில் ெதாற்று ஏற்பட்டதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Indians ,Goa ,government ,Corona Panic Corona ,Coimbatore , Corona ,s shipwrecked ,Coimbator, government
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...