×

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய தொல்லியல்துறை ஏற்க திட்டம்?

* தீவிபத்து சேத விவரங்களை கேட்கிறது * தரிசனம், வழிபாடு முறை மாறுபடுமா?

மதுரை: தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை, மத்திய தொல்லியல் துறை ஏற்க திட்டமிடுவதாக தெரிகிறது. மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் 10 ஆயிரம் பழமையான கோயில், அரண்மனை, புராதன சின்னங்களை ஏற்று பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் இருப்பதாகவும் மத்திய தொல்லியல் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசு மவுனம் சாதிக்கிறது. இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மத்திய தொல்லியல் துறை ஏற்க திட்டமிடும் முதற்கட்ட பட்டியலில் முக்கியமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழ மன்னன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் கட்டிய 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில். புராதான நகரில் அமைந்துள்ள இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை ஏற்பதில் முனைப்பு காட்டுகிறது.

இதற்கு முன்னோட்டமாக 2 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வரலாற்று சிறப்புமிகுந்த வீரவசந்தராயர் மண்டபம் சிதைந்து இடிந்து, சுவாமி சன்னதி கிழக்கு ராஜகோபுர வாயில் இதுவரை மூடியே இருப்பது குறித்தும் புனரமைப்பு குறித்தும் முழு விவரங்களை தற்போது அறநிலையத்துறையிடம் மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. இதன் புனரமைப்பு பணிகளை தமிழக அறநிலையத்துறை தொடங்காமல், ‘விரைவில் பணி தொடங்கும்’ என்று கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது.இதற்கு மத்திய அரசின் உதவியை தமிழக அரசு கேட்டால் அளிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோயில் நிர்வாகமே புனரமைப்பு பணியை மேற்கொள்ளும் என தமிழக அரசு உறுதியளித்தது. அதன்படி பணி நடைபெறவில்லை.இந்த சூழலில் தற்போது மத்திய தொல்லியல் துறை, தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விவரங்களை ஒப்படைக்கும்படி அறநிலையத்துறையிடம் கேட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையின் மூலம், மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய தொல்லியல் துறை ஏற்று, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, “மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமின்றி மதுரை நகர் மற்றும் அதனை சுற்றிலும் மாரியம்மன் தெப்பக்குளம், திருமலைநாயக்கர் மகால், யானைமலை உள்ளிட்ட 16 புராதன சிறப்பிடங்கள் இருப்பதால், மத்திய தொல்லியல் துறையின் குறி முதலில் மதுரையை நோக்கி இருக்கக்கூடும். மீனாட்சி அம்மன் கோயிலில் கடும் கட்டுப்பாடுகளால் ஏற்கனவே உள்ளூர் பக்தர்கள் வருகை குறைகிறது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை ஏற்று வழிபாட்டு தலத்தை, காட்சிகோயிலாக மாற்றி விடக்கூடாது”  என்றார்.மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தொல்லியல் துறை ஏற்றாலும் கோயில் வழிபாடு, தரிசனம், பாரம்பரிய முறைகளில் தலையிடாது, புனரமைப்பு பணிகளையே மேற்கொள்ளும்” என்றார்.

Tags : Madurai Meenakshi Amman Temple ,Tamil Nadu State Department , Controlled, Tamil Nadu ,State Department, Madurai ,Meenakshi Amman Temple,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி...