×

விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன்? : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை :விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன் என்று வருமான வரித்துறை கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் வருமானத்தில் பிடித்த வரித் தொகையை செலுத்தாதது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான காலாண்டு கணக்கை அண்ணா பல்கலை. தாக்கல் செய்யாதது ஏன் என வருமான வரித்துறை வினவியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 23 மையங்களில் அண்ணா பல்கலை. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு வழங்கிய உழைப்பூதியத்தில் TDS எனப்படும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடம் இருந்து சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை TDS வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை முறையாக அண்ணா பல்கலைக்கழகம் செலுத்தவில்லை.  

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விடைத்தாள் திருத்திய ஆசிரியருக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் எவ்வளவு வருமான வரி பிடிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வருமான வரியை தாக்கல் செய்திருந்தால் அதன் நகலை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன் என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரியை உடனடியாக செலுத்தி அதற்கான ரசீதுகளுடன் மார்ச் 13-ம் தேதி காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

Tags : editors ,Anna University , Why not pay the income tax on the salary of the editors of the answer sheet? : Income Tax Notice to Anna University
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது