×

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள்: மக்கள் கடும் அவதி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில், மேம்படுத்தப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய வெளிப்புற நோயாளிகளுக்கான கட்டிடம் ₹60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தினை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ம் தேதி தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்த கட்டிடத்தில் முதலுதவி சிகிச்சை மையம், மருத்துவ ஆய்வகம், தொற்றுநோய் அல்லாத பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பரிசோதனை அறைகள், பல் சிகிச்சை மையம் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது.

இதனால், ஆரம்ப சுகாதார நியைத்திற்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய வெளிப்புற நோயாளிகளுக்கான கட்டிடத்துக்கு சொந்தமாக சுற்றிலும் சுமார் 5 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஏற்கனவே அரசு ஆரம்ப சுகாதாரநிலைய தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான பழைய குடியிருப்புகள் கட்டப்பட்டு முட்புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் வெளிப்புற நோயாளிகளுக்கான கட்டிடத்துக்கு அருகில் தினமும் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர். அதோடு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒருமுறை குப்பைகள் அங்கேயே தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சனி, ஞாயிறு கிழமைகளில் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். மேலும் தலைமை மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பழைய குடியிருப்புகளை சூழ்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி ஆய்வு நடத்தி, திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சுகாதார நிலையத்தில் நவீன மருத்துவ வசதிகளை செய்து தரம் உயர்த்த வேண்டும்’ என்றனர்.


Tags : Government ,health center complex ,Ranipet Ranipettai , Ranipettai, trash, people, avadi
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...