×

கடையம் அருகே அறிவிப்பு பலகை இன்றி நடைபெறும் சாலை பணி: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்

கடையம்: கடையம்-தென்காசி சாலையில் எல்லைப்புளி விலக்கு அருகில் நடைபெறும் சாலை பணியில் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் நடக்கிறது. கடையம் அருகே எல்லைப்புளி விலக்கு அருகில் கடையம்-தென்காசி சாலையின் இரு புறமும் சுமார் 10 அடி ஆழத்திற்கு மேலாக குழியை தோண்டி போட்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பகுதியில் பணி நடைபெறுவதற்கான எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. மேலும் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால் இவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாலையின் இருபுறமும் பணி நடைபெறுவதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடிகிறது. இதனால் சாலையில் குவிக்கப்பட்டுள்ள மணல், ஜல்லிகளால் இரவில் இருசக்கர வாகனங்களில் வருவோருக்கு தெரியாததால் விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரங்களில் பணி நடைபெறுவது தெரியாமல் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து அதில் வந்தவர்கள் காயமடைந்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அரங்கேறி வருகின்றன. கடையம் அடுத்துள்ள ஆம்பூர்-கருத்தப்பிள்ளையூர் சாலையில் பணி குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே  மாவட்ட நிர்வாகம், இதில் தனி கவனம் செலுத்தி சாலைப்பணி நடைபெறுவது குறித்து அப்பகுதியில் அறிவிப்பு பலகை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : notice board ,kadaiyam ,shop ,accidents , kadaiyam , road work, officers, accidents
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி