×

50 சோதனைகள் செய்து சுத்தமான குடிநீர் தருகிறோம்: ஜெ.அனந்த நாராயணன், கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

சென்னை: நிலத்தடி நீர் எடுக்காமல் எந்த தொழிலும் செய்ய முடியாது என்கிற நிலை தான் உள்ளது. அப்படி தான் நாங்களும் நிலத்தடி நீரை பயன்படுத்தி தொழில் செய்கிறோம். இதில் என்ன தவறு என்று தெரியவில்லை. இதே போல தான், டயர்  கம்பெனி, டெக்ஸ்டைல், கார் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகள்; நிலத்தடி நீர் எடுக்காமல் அந்த கம்பெனிகளால் உற்பத்தி செய்ய முடியாது. நாங்கள் எடுக்கும் நிலத்தடி நீர் அளவு மிகவும்  குறைவு தான். எங்களால் யாருக்கும் பிரச்னை இல்லை. இப்படி கேன் வாட்டருக்காக நாங்கள் எடுக்கும் குடிநீருக்காக, நிலத்தடி நீர்  எடுப்பது 1 சதவீதம் தான். எனவே, குடிநீருக்கென நிலத்தடி நீரை  எடுப்பதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும். எங்களுக்கு சில விஷயங்களில் விலக்கு அளித்து குடிநீரை தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்றிதழ் பெற  பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பித்துள்ளோம். எங்கெல்லாம் நிலத்தடி நீர் எடுக்க முடியுமோ அங்கெல்லாம் தண்ணீர் எடுக்க தடையில்லா சான்றிதழ் கொடுக்க  உயர்நீதிமன்றம் பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை 15 நாட்களுக்குள் தருமாறும் கெடு விதித்துள்ளது. அதிநுகர்வு, அபாயகரமான பகுதிகளில் கம்பெனிகள் இருந்தாலும் வேறு பாதுகாப்பான பகுதிகளில் தண்ணீர்  எடுக்க தடையில்லா சான்றிதழ் தருமாறு நாங்களும் பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம். லைசென்ஸ் வைத்துள்ள கேன் வாட்டர் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது வரைக்கும் இயங்கி தான் வருகிறது. தற்போது லைசென்ஸ் பெறாத கம்பெனிகள் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1700 கேன் வாட்டர் கம்பெனிகள் உள்ளது. இதில், 1,100 கம்பெனிகள் உரிமம் இல்லாமல் இருக்கிறது. அந்த கம்பெனிகள் உரிமம் வாங்க முடியாத நிலையில் உள்ளது. அந்த கம்பெனிகள் தற்போது தங்களது விண்ணப்பத்தை  பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அவர்கள் விண்ணப்பத்தை தந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 13ம் தேதி வருகிறது. அப்போது பொதுப்பணித்துறை சார்பில் எத்தனை பேர்  விண்ணப்பித்துள்ளனர். எத்தனை பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

நாங்கள் 6 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். அந்த நேரத்தில் கேன் வாட்டர் சப்ளை ஆகி கொண்டு தான் இருந்தது. நாங்கள் இந்திய தர நிர்ணயத்தின் ஐஎஸ்ஐ முத்திரையுடன், 50 சோதனைகள் செய்த பிறகு தான் சுத்தமான, இயற்கை  கனிமங்கள் குறையாமல் குடிநீரை வெளியே அனுப்புகிறோம். உரிமம் பெற்ற கம்பெனிகள்  உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழை வைத்தும் அனுப்புகின்றன. இது இல்லாமல் லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக நிறைய கம்பெனிகள்  இயங்கி வருகிறது. அந்த போலி கம்பெனிகளை ஒழிக்க வேண்டும். குடிநீர் ஆலை தொடங்குவதற்கு நிலத்தடி நீர் எடுக்க பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். இந்திய தர நிர்ணய ஆணையம், உணவு பாதுகாப்பு துறை, தற்போது ஜிஎஸ்டி விண்ணப்பிப்பது, உள்ளாட்சி அமைப்புகளில்  தொழில் வரி செலுத்துவது போன்ற அனைத்து உரிமங்கள் வாங்கி தான் நாங்கள் இந்த ஆலையை செயல்படுத்தி வருகிறோம்.

அபாயகரமான, அதிநுகர்வு பகுதிகளில் தடையில்லா சான்று பல ஆண்டுகளாக வழங்காமல் இருந்தனர். அதே நேரத்தில் பாதி அபாயகரமான பகுதி, பாதுகாப்பு பகுதிகளில் சான்று வழங்கப்பட்டு தான் வருகிறது. மற்றப்படி சட்டதிட்டங்களுக்கு  உட்பட்டு தான் வழங்கி வருகிறது. குடிநீர் பயன்பாட்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இந்த சட்டத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தான் நாங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

உரிமம் பெற்ற கம்பெனிகள்  உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழை வைத்தும் அனுப்புகின்றன. இது இல்லாமல் லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக நிறைய கம்பெனிகள் இயங்கி வருகிறது. அந்த போலி கம்பெனிகளை ஒழிக்க வேண்டும்.

Tags : President ,J. Anantha Narayanan ,Greater Tamil Nadu Drinking Water Producers Association ,J. Ananda Narayanan ,Greater Tamilnadu Drinking Water Producers Association , 50 tests to provide clean drinking water: J. Ananda Narayanan, President of Greater Tamilnadu Drinking Water Producers Association
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...