×

ஜவ்வாதுமலையில் சோழர் காலத்து நடுகல், அரியவகை நாய் நடுகற்கள் கண்டெடுப்பு

ஜோலார்பேட்டை: ஜவ்வாதுமலையில் சோழர் காலத்து நடுகல் மற்றும் அரியவகை நாய்நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் வேந்தன், அ.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் தி.சுரேஷ், ச.மணிமேகலை ஆகியோர் நேற்று முன்தினம் ஜவ்வாதுமலை பகுதியில் களஆய்வில் மேற்கொண்ட போது சோழர் காலத்து நடுகல்லும், நாய்களுக்கான நடுகற்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் 34 மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் மேல்பட்டு என்னும் மலை ஊரில் பெரிய வேடியப்பன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் உள்ள கருவறை தெய்வம் கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடுகல்லாகும். இது 42 இன்ச் உயரமும், 38 இன்ச் அகலமும் 4.5 இன்ச் பருமனும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. நடுகல் உருவம் நின்ற கோலத்தில், வலது கையில் நீண்ட கத்தியும், இடது கையில் ஆள் உயர வில்லையும் வைத்துக் கொண்டு கம்பீரத்துடன் நடுகல் உருவம் உள்ளது. வலது பக்கம் சாய்ந்த கொண்டையும், கழுத்தில் ஆபரணங்களும், கால்களில் வீரக்கழல்களும் அணிந்துள்ள கோலத்தில் நடுகல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்நடுகல் வீரனின் வலது கால் ஓரத்தில் நாய் உருவம் ஒன்று உள்ளது. வீரனோடு நாயும் இருப்பது போன்ற நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள எடத்தனூர் என்னும் சிற்றூரில் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. அதிலிருந்த கல்வெட்டானது எதிரிகளோடு போரிட்டத்தன் தலைவனோடு நாயும் போரிட்டு வீரமரணம் அடைந்ததை அச்செய்தி கூறுகிறது. அந்த நாயின் பெயர் கோவிவன் என்று இடம் பெற்றிருந்தது. அதே போன்ற அமைப்புடன் ஜவ்வாதுமலை நடுகல்லும் கல்வெட்டுடன் உள்ளது. கல்வெட்டினைச் சரியாகப் படிக்க இயலவில்லை. இந்த நாயும் தன் தலைவன் எதிரிகளோடு போரிடும் போது, பகைவர்களை எதிர்த்துப் போரிட்டுத் தன் தலைவனோடு உயிர்விட்ட நன்றியுள்ள வீரநாயாக இருக்க வேண்டும்.

இந்நாயின் செயலை நன்றி கூறும் விதத்தில் இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேடியப்பன் கோயிலின் வெளியே இரண்டு பெரிய கற்களில், இரண்டு நாய்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. முதல் நாயின் வாயில் உள்ள பற்கள் வெளியே தெரியும்படி உள்ளது. இது நாயின் கோபத்தைச் சித்தரிப்பதாக உள்ளது. மற்றொரு நாயும் இரண்டு காதுகளுடன் கோபத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 நாய்களின் உருவத்தோடு இந்நடுகல் இருப்பது அரியவகை நடுகல்லாக அறிய முடிகிறது. தமிழகத்தில் சேவல், கிளி, குதிரை, யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நடுகற்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் இந்த நடுகல்லும் சிறப்புடைய நடுகல்லாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Javvatumalai
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...