×

திருவண்ணாமலையில் உலக மகளிர் தினத்தையொட்டி தலைமுடியில் கயிறு கட்டி காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய யோகா ஆசிரியை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று, உலக மகளிர் தினத்தையொட்டி யோகா ஆசிரியை தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருக்கு டிஎஸ்பி அண்ணாதுரை பரிசு வழங்கி பாராட்டினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் நேற்று, யோகா ஆசிரியை தலை முடியில் கயிறு கட்டி காரை இழுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் கே.வலு முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் எம்.நித்யா வரவேற்றார். நேரு யுவகேந்திரா கணக்காளர்  ஜி.கண்ணகி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, யோகா ஆசிரியை ஆர்.கல்பனா, தனது தலை முடியில் கயிற்றை கட்டி காரை இழுத்து சென்றார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன் இருந்து தொடங்கி டவுன் காவல் நிலையம் வரை சுமார் 300 மீட்டர் தூரம் காரை இழுத்து சென்று கல்பனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து யோகா ஆசிரியை கல்பனா கூறியதாவது: நான் யோகா ஆசிரியையாக இருக்கிறேன். சிலம்பம், வில்வித்தை ஆகியவற்றை கற்று கொடுத்து வருகிறேன். அண்ணாமலையார் அருளால் உலக மகளிர் தினத்ைத முன்னிட்டு எனது தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்துள்ளேன். இதற்கு எனது பெற்றோரும், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் சுரேஷ்குமாரும் அளித்த ஊக்கமும்தான் காரணம். இனி வரும் காலங்களில் இதைவிட பெரிய சாதனை நிகழ்த்த உள்ளேன். ஒவ்வொரு பெண்களிடமும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை பெண்கள் தைரியமாக வெளிக்கொண்டு வரவேண்டும்இவ்வாறு அவர் கூறினார். இதில் ஸ்கேட்டிங் கழகத்தை சேர்ந்த சுரேஷ்குமார், அறிவியல் ஆராய்ச்சியாளர் ஹயாத்பாஷா, அக்னி குளம் சோணாசலம் சுவாமிகள், தீபம் சரணவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை, சாதனை புரிந்த யோகா ஆசிரியை கல்பனாவுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். முடிவில் யோகா பயிற்சியாளர் ஏ.மதுராம்பாள் நன்றி கூறினார்.

Tags : Yoga Teacher ,Thiruvannamalai ,World Women's Day Thiruvannamalai Yoga Teacher In World Women's Day , Thiruvannamalai, World Women's Day, Hair, Awareness, Yoga Teacher
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...