×

ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் மலையாள செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 2 நாள் தடை நீக்கம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக பாரபட்சமாக செய்திகளை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி ஏசியாநெட்  நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரண்டு மலையாள மொழி சேனல்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த 48 மணிநேர தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய  அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரு வாரங்களுக்கு முன்,  டெல்லியில் நடந்த சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.  இதில் 53 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  வீடுகள்,  கடைகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனை ஒளிபரப்பிய  மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகியவை கலவரம் தொடர்பாக பாரபட்சமான செய்திகளை ஒளிபரப்பி, வகுப்புவாதத்தைத்  தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, அவற்றுக்கு 48 மணி நேரம் தடை  விதித்து மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடையை  நீக்கக் கோரி இரண்டு  சேனல்களும் மத்திய தகவல், ஒளிபரப்புத்துறைக்குக் கடிதம்  எழுதியதை அடுத்து, இந்த தடை நேற்று காலை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நேற்று அதிகாலை 1.30 மணி முதல் ஏசியாநெட் நியூஸ், காலை 9.30 மணி முதல்  மீடியா ஒன் சேனல்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.  இதற்கிடையே,  சேனல்கள் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடை ஊடக சுதந்திரத்தைக்  கட்டுப்படுத்துவதாகும் என்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்  தெரிவித்தன. தடை நீக்கம் தொடர்பாக, புனேயில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த  மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``என்ன நடந்தது  என்பதைக் கண்டறிந்த உடன் இரண்டு சேனல்களுக்கும் ஒளிபரப்பு அனுமதி  அளிக்கப்பட்டது.

சேனல்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளை ஆராய்ந்த பின்னர்,  அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத்தில் பத்திரிகை  சுதந்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. பத்திரிகை சுதந்திரத்துக்கு அரசு  ஆதரவு அளிக்கிறது. அதே நேரம் ஊடகங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து  சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்,’ என்று கூறினார்.



Tags : Media One ,Malayalam ,Union Minister ,Media One Malayalam , Asianet News, Media One, Malayalam News Channels, Union Minister
× RELATED ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது