×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி

சென்னை: உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமான திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், ெபாதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திமுகவின் பொதுச் செயலாளரும் அனைவராலும் இனமானவர் என்று அழைக்கப்பட்டவருமான பேராசிரியர் க.அன்பழகன் (98) வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மாதம் 24ம் தேதியன்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்ேபாலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்று க.அன்பழகனை பார்த்துவிட்டு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள்” தெரிவித்ததாக கூறினார். இதையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக குவியத் தொடங்கினர். தொண்டர்கள் குவிந்ததையடுத்து பாதுகாப்புக்காக மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனிக்காமல் க.அன்பழகனின் உயிர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக கொடி போர்த்தப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் அவரது உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரியன் கார்டனில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, ஆற்காடு வீராசாமி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட எம்பிக்கள், திமுக துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.ேக.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம், எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், கே.எஸ்.ரவிச்சந்திரன், கு.க.செல்வம், எம்.கே.மோகன், அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பேராசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, எச்.வசந்தகுமார், காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், அரும்பாக்கம் க.வீரபாண்டியன் மற்றும் ரங்கபாஷ்யம், சிவராமன், எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். பாஜக சார்பில் துணை தலைவர் எம்.என்.ராஜா, சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்கர்ணா, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், ஜி.ஆர்.வெங்கடேஷ், விடியல் சேகர், கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன் உள்ளிட்ேடார் அஞ்சலி ெசலுத்தினர்.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய  தலைவர் காதர் மொகிதீன், தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எம்எல்ஏ தனியரசு, திராவிட இயக்க தமிழர் பேரவை  தலைவர் சு.ப.வீரபாண்டியன், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், புரட்சி தமிழகம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி,   ஐஜேகே ரவிபச்சமுத்து, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ நல்லத்தம்பி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாநில விவசாய அணி துணை தலைவர் இரா.தமிழ்மணி, திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,  துணை செயலாளர் வி.பி.மணி, தலைமை ெசயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், அருள் நிதி,

கவிஞர் வைரமுத்து, முரசொலி செல்வம், ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, சபரீசன், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தொழிலதிபர் விஜி சந்தோஷம், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், சென்னை, மயிலை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டிஜிஎஸ் பால்தினகரன் மற்றும் திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் பேராசிரியரின் உடல் அவரது இல்லத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது திமுக முன்னணி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இறுதி சடங்கை பேராசிரியர் அன்பழகனின் மகன் அன்புச்செல்வன் செய்தார். தொடர்ந்து அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின்னர் தலைவர்கள் அளித்த பேட்டி: புதுவை முதல்வர் நாராயணசாமி: கலைஞருக்கு  தோள் கொடுத்த மாபெரும் தலைவர் பேராசிரியர். கலைஞரின் நம்பிக்கைக்கு  பாத்திரமாக திகழ்ந்தவர். அவரது இணைபிரியா நண்பர். எளிமையாக வாழ்ந்த அவரது  மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த்: பேராசிரியர் பொதுவாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான். ஒன்று மதிப்பு, மற்றொன்று மரியாதை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கி.வீரமணி (திக தலைவர்): அனைவராலும் இனமான பேராசிரியர் என்று அழைக்கப்பட்டவர் இன்று வரலாறு ஆகிவிட்டார். திமுகவின் அடுத்த தலைமை மு.க.ஸ்டாலின் என்பதை உறுதி செய்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு எடுத்துக் காட்டாக இருந்தவர். மறைந்தாலும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ: கட்சிகளில்  பிளவுகள் ஏற்பட்டபோது கட்டி காத்த பெருமை பேராசிரியரை சாரும்.  தலைச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிதானம் தவறாதவர், நூறாண்டு கடந்து  வாழ்வார் நினைத்தேன். கலைஞர் பிரிவு பாதித்ததால் 98 துவக்கத்தில்  மறைந்துவிட்டார். திராவிட இயக்க கண்களில் ஒருவராக பேராசிரியர் வாழ்வார்.  பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதிமுக கொடிகள் 3 நாள்  அரைக்கம்பத்தில் பறக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி: 70 ஆண்டுக்கு மேலாக அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துகொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய திருநாட்டில் உள்ள மிக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பேராசிரியர். தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் திராவிட கழகத்துக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துகொண்டு தொண்டாற்றியவர். அருமை அண்ணன் மறைவு அரசியல் உலகிற்கும், தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும், திமுகவிற்கு இழப்பாகும்.

தன்னுடைய ஒப்பற்ற எழுத்தாற்றல், பேச்சாற்றல் என தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கலைஞரின் மூத்த சகோதரனாக, தோழராக அவருக்கு துணை நின்று திராவிட கழகத்தை வளர்த்தவர். பேராசிரியரின் தொண்டும், பணியும், அரசியல் சாதனைகளும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். கவிஞர் வைரமுத்து: திமுக  பொதுச்செயலாளராகவும், 75 ஆண்டு காலம் கலைஞருடன் நற்புடன் இருந்தவர்  பேராசிரியர் அன்பழகன். ஒரு நாளும் அவருடைய தலையில் கிரீடத்தை  ஏற்றுக்கொள்ளாதவர். தோல்வியால் துவண்டு போனதில்லை. வெற்றி, தோல்வி  இரண்டையும் ஒன்றாக எடுத்து கொள்வார். இவரது வழியே திராவிட இயக்கத்துக்கு  பெரும் பாடமாக இருக்கிறது. தடம்மாறாதவர், தடுமாறாதவர். அவரை இழந்துவாடும்  குடும்பத்தினருக்கும், திமுக தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துகொள்கிறேன்.

அன்புமணி: திமுக பொது செயலாளர் அன்பழகனின் மறைவு உலக தமிழர்களுக்கு பேரிழப்பு என்றும் அவர் 80 ஆண்டுகாலமாக பொது வாழ்வில் ஈடுபட்டவர். பேராசியர் நேர்மையானவர். கட்சி பாகுபாடின்றி அனைவருடனும் பழக கூடியவர். மருத்துவர் ராமதாசுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். எஸ்.டி.பி.ஐ .கட்சி தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி: பேராசிரியர் மறைவு என்பது தமிழினத்திற்கும் திராவிட இயக்கத்துக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மிகச் சிறந்த கொள்கை பற்றாளர். தான் கொண்ட திராவிட கொள்கையில் தீவிரமாக இறுதிவரை வாழ்ந்தவர். பொது வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர். சமூகநீதிக்கான போராட்டங்களில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

திமுக உட்கட்சி தேர்தல்  ஒரு வாரம் ஒத்திவைப்பு
 திமுக உட்கட்சி தேர்தல்கள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது என்று திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.   திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்றத் தோழரும் 43 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி, திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் விடுத்த அறிக்கையின்படி, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் ஊர்க்கிளை - உட்கிளைக் கழகத் தேர்தல்கள் ஒருவார காலம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி இரங்கல்
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு, ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவையொட்டி, அவரது மகன் அன்புச்செல்வனுக்கு ராகுல்காந்தி எம்பி அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
  தங்களுடைய தந்தை மறைந்த தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவினால் நீங்கள் படும் துன்பங்களையும், அவரது இழப்பு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் உணர முடிகிறது. எனவே தங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த கஷ்டமான நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : K Anbalakan ,filmmakers ,K Anbazhagan ,DMK ,leaders , DMK general secretary K.Anabhagan, body cremation, political leaders, filmmakers
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...