×

போலி வாரிசு சான்றிதழ் வழங்கிய வருவாய்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலி வாரிசு சான்றிதழ் வழங்கிய வருவாய்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூரை சேர்ந்தவர் கந்தசாமி கிராமினி. இவர் கடந்த 1970ல் மரணமடைந்தார். இதையடுத்து, இவரது சொத்துக்கள் தொடர்பான வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கந்தசாமி கிராமணியின் வாரிசு தான்தான் என்றும் அதற்கான வாரிசு சான்றிதழ் தன்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலசுப்பிரமணியம் சார்பில் 1990 ஜூன் மாதம் 18ம் தேதி மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தான் வாங்கிய வாரிசு சான்றிதழை தாக்கல் செய்தார்.

அப்போது, எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், நீதிபதியிடம், மனுதாரர் தாக்கல் செய்த வாரிசு சான்றிதழ் போலியானது என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த சான்றிதழ் உண்மையானதா என்று கண்டறியுமாறு அரசு சிறப்பு வக்கீல் பாப்பையாவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் அளித்த அறிக்கையில் அந்த சான்றிதழில் உண்மைத்தன்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  தமிழ்நாட்டின் தலைநகர் மெட்ராஸ் என்பது 1994ல் சென்னை என்று மாற்றப்பட்டது. இந்த சான்றிதழ் 1990ல் வாங்கப்பட்டுள்ளது. சான்றிதழின் லெட்டர் ஹெட்டில் மெட்ராஸ் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழில் மெட்ராஸ் என்பதற்கு பதில் சென்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலக முத்திரையிலும் சென்னை என்றே உள்ளது. கந்தசாமியின் முகவரியிலும் சென்னை என்றே உள்ளது.

எனவே, இந்த சான்றிதழ் போலியானது என்று அரசு சிறப்பு வக்கீல் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அவருக்கு இந்த நீதிமன்றம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.  இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் போலி சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது. போலி வாரிசு சான்றிதழ் பெற்றவர் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் மோசடி செய்தவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்காமல் தண்டனையும் வழங்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி வரும் ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Revenue Officers ,High Court ,Chennai Action ,Chennai , Fake Successor Certificate, Revenue Officers, Madras High Court
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...