×

தமிழகத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 6 பேருக்கு காது கேளாமை குறைபாடு: விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள் தகவல்

சேலம்: தமிழகத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 6 பேருக்கு காது கேளாமை குறைபாடு உள்ளது என உலக செவித்திறன் விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள் தெரிவித்தனர். உலக செவித்திறன் விழிப்புணர்வு வாரம் மார்ச் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் அரசு மருத்துவமனையில் செவித்திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை டீன் பாலாஜிநாதன் துவக்கி வைத்தார். பேரணியில் செவிலியர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் செவித்திறன் குறைபாடு, கன்னத்தில் பலமாக அறையக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

மேலும்,மாணவிகள் செவித்திறன் குறித்த துண்டு பிரசுங்களை பொதுமக்களிடம் வழங்கினர். செவித்திறன் விழிப்புணர்வு குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: ‘‘2019ம் ஆண்டு உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின் படி 46.6 கோடி மக்கள் செவித்திறன் குறைபாடுகளுடன் இருக்கின்றனர். இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலே காது கேளாத குறைபாடு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் இரண்டு பேர் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் என்றும் உள்ளது.

குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம் பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையான சிகிச்சை அளித்து வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவு குறைக்க முடியும். வாகன சத்தங்களை குறைப்பது, ஹெட்போன்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : babies ,Tamil Nadu ,rally ,Doctors , Child, hearing impairment
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...