×

திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க அரசியல்வாதியாக விளங்கியவர் க.அன்பழகன்: முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி

சென்னை: தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அன்பழகன் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான, பேராசிரியர் க.அன்பழகன் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் அன்பழகன் என முதலமைச்சர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 43 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச் செயலாளராகவும், அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களுடன் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டதோடு, 75 ஆண்டுகள் பொதுவாழ்வில் அயராது உழைத்து விடைபெற்று சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகன் அவர்களது மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியா இழப்பு. அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கல், என தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy Prachajali ,K. Palanisamy ,Dravidian ,politician ,K.Anabhagan ,Chief Minister , DMK, General Secretary, KA Anbazhagan
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...