×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு: வைரமுத்து, கி.வீரமணி, முத்தரசன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதுபெரும் திராவிட இயக்கத் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.கடந்த பிப்ரவரி 24ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் க.அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் வயதின் மூப்பு காரணமாக அவர் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரவு ஒரு மணியளவில் அன்பழகன் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, கி.வீரமணி, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து

பேராசிரியர் க.அன்பழகனின் தொடக்கப்புள்ளியும், முற்று புள்ளியும் இனமானம்தான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திராவிட இயக்கத்தின் கடைசி பெருந்தலைவர் மறைந்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி

மறைந்த பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரை பற்றி பேசா நாள் நாளே என்ற அடிப்படையில் வாழ்ந்து வலராறாய் மாறியுள்ளார் இனமான பேராசிரியர் என தெரிவித்துள்ளார்.

முத்தரசன்

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு மிகுந்த வேதனை தரக்கூடியதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு எனவும் அவர் உருக்கம் தெரிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி

திமுகவை வலுவாக்க பாடுபட்டவர் பேராசிரியர் அன்பழகன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மரியாதைக்குறிய தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி

கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர் க.அன்பழகன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைசர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  அன்பழகனின் மறைவு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் பேரிழப்பு என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்

க.அன்பழகன் மறைவு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்தியில், திராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடியும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனமானப் பேராசிரியர் என திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் க.அன்பழகன் தன் இறுதி முச்சு வரை திமுகவுக்கும் மக்களுக்கும் செய்த பணிகள் பாராட்டத்தக்கவை. அவரது மறைவு தமிழகத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும், குடும்பத்தாருக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள், என தெரிவித்துள்ளார்.

Tags : K Anbazhagan ,DMK ,death ,General Secretary ,K Veeramani ,Vairamuthu ,Muththarasan ,KS Alagiri , DMK General Secretary, kaanpalakan, death, mourned
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்