×

கொரோனாவால் பொருளாதார மந்தநிலை பீதி பங்குச்சந்தையில் 3.28 லட்சம் கோடி இழப்பு: யெஸ் வங்கி பங்கு 85% சரிந்தது

மும்பை: பங்குச்சந்தையில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு 3.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.   கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது.

 தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 கடந்த 28ம் தேதி மட்டுமின்றி, அதற்கு முன்பு 6 நாட்களாகவே தொடர்ந்து அதிக சரிவை சந்தித்தது. தொடர்ந்து 6 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,872 புள்ளிகள் சரிந்தது. கடந்த வாரம் பங்குச்சந்தைகளில் 11.63 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதே போன்ற மற்றொரு கடும் சரிவு நேற்றும் ஏற்பட்டது.   நேற்று முன்தினம் இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றம் கண்டன. ஆனால் நேற்று வர்த்தகம் துவங்கியபோது மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 37,613.96 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக இடையில் அதிகபட்சமாக 37,011.09 புள்ளி வரை, அதாவது, 1,459 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 893.33 புள்ளி சரிந்து 37,576.62 புள்ளிகளாக இருந்தது.

  தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 11,000 புள்ளிகளுக்கு கீழ் வந்து விட்டது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 279.55 புள்ளி சரிந்து 10,989.45 புள்ளிகளாக இருந்தது. கொரோனா வைரசால் ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் 20,000 கோடி டாலருக்கு மேல் இழப்பை சந்திக்கும் என்ற புள்ளி விவரங்கள் வெளியானது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக யெஸ் வங்கி பங்கு வர்த்தக இடையில் 85 சதவீதம் சரிந்து 5.55 ஆனது. வர்த்தக முடிவில் 56 சதவீதம் சரிந்து 16.20 ஆனது. நேற்றைய சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3,28,684.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Corp Yen Bank , Corona, economic recession, stock market, Yes Bank
× RELATED கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு