×

நாகேஸ்வரராவ் பூங்காவில் இலவச வை-பை சேவை

சென்னை: நாகேஸ்வரராவ் பூங்காவில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வை-பை சேவையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று  துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டுக்கு உட்பட்ட லஸ் நிழற்சாலையில் நாகேஸ்வரராவ் பூங்கா அமைந்துள்ளது. இதனை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வை-பை இணையதள சேவையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 669 பூங்காக்கள் அமைந்துள்ளன.  ஏ.சி.டி பைபர் நெட் என்ற நிறுவனம் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ், வை-பை இணையதள வசதியினை முதற்கட்டமாக தி.நகரில் உள்ள நடைபாதை வளாகத்தில் அமைத்துள்ளது.

தொடர்ந்து, லஸ் நிழற்சாலையில் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் இந்த வை-பை இணையதள சேவை தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும்,  தி.நகரில் உள்ள நடேசன் பூங்கா, அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா, கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா மற்றும் அடையாறில் உள்ள இந்திரா நகர் பூங்கா ஆகிய 4 பூங்காக்களில் இதேபோன்று பை-வை இணையதள சேவை துவங்கப்பட உள்ளது.  இந்த இணையதள வசதியானது 24*7 செயல்படும். ஒவ்வொருவருக்கும் 45 நிமிடங்களுக்கு 20 MbPs வேகத்துடன் தடையில்லாமல் ஒவ்வொரு நாளும் இணையதள சேவை வழங்கப்படும். இந்த பூங்காவில் உள்ள 8 தூண்களில் அமைக்கப்பட்டுள்ள வை-பை ஹாட்ஸ்பாட் இணையதள வசதியில், ஒரு தூணில் உள்ள வை-பை ஹாட் ஸ்பாட் இணையதள வசதியை சுமார் 250 முதல் 300 நபர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதன்மூலம் சமூக வலைதளங்கள், அன்றாட செய்திகளை தங்கள் கைபேசி வாயிலாக உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ், மண்டல அலுவலர் ரவிக்குமார், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Nageswara Rao Park , Nageswara Rao Park, Free Wi-Fi
× RELATED மயிலாப்பூர் பூங்காவிற்கு வரும்...