×

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல் நாளில் 2 சுயேச்சைகள் மனு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், செல்வராஜ் மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரின் பதவிக்காலமும், திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதிவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் மார்ச் 6ம் தேதி (நேற்று) முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. 16ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அதன்படி, 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 பேருக்கு மேல் போட்டியில் இருந்தால் வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று, 2 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். அதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த பத்மராஜன் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த அக்னி ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.

பத்மராஜன், இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக பிரபலங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்வார். ஆனால், எம்எல்ஏக்கள் யாரும் இவருக்கு முன்மொழியாததால் வருகிற 16ம் தேதி வேட்புமனு பரிசீலனையின் போது இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். இவர் தற்போது 214வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பத்மராஜன் கூறும்போது, “தனக்கு வெற்றி முக்கியமல்ல தோல்வியே முக்கியம் என்று தெரிவித்த அவர், லிம்கா புத்தகத்தில் 3 முறை இடம்பிடித்து உள்ளதாகவும், கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெறுவேன்” என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் 3 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோ ஆகிய 3 பேர் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



Tags : Election ,state ,MPs ,Rajya Sabha ,Tamil Nadu ,Elections ,Independents , Elections,Tamil Nadu,independents,first day
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...