×

ஒரு பண்பாடு இல்லாமல் பாரதம் இல்லை... 10 கி.மீ. மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்

கோபி: கலாசாரம் மற்றும் பண்பாட்டை காக்க வலியுறுத்தி கோபிசெட்டிப்பாளையம் அருகே கோயிலில் நடந்த திருமணத்தில் மணமக்கள் 10 கி.மீ. தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். திருமணம் என்றாலே ஆடம்பரம் என்ற கட்டுக்குள் மக்கள் வந்துள்ள நிலையில், ஒருசிலர் மட்டும் திருமணங்களை புதுமையாக நடத்தி வருகின்றனர். பழைய பண்பாடு மற்றும் கலாசாரங்கள் வேரோடு அழிந்துவரும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே நடந்த திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருங்கரடு முருகன் கோயிலில் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பரணி பிராகஷ் - சுபாசினி ஆகியோரின் திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்தில் பழமையை நினைவு கூறும் விதமாகவும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் மணமக்கள் கோயிலிருந்து திருமண மண்டபம் வரை சுமார் 10 கி.மீ. தூரம் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.

விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றால் மாட்டு வண்டி பயணம் மேற்கொள்வது இயல்பு. ஆனால் இந்த மணமக்களின் இரு குடும்பங்களும் விவசாயக் குடும்பத்தினர் அல்ல. மணமக்கள் இருவரும் முதுகலை பட்டயப்படிப்பு முடித்து நகர பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் இப்படி மாட்டு வண்டி பயணம் செய்தது வியப்பை ஏற்படுத்தியது.

மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை வழியில் உள்ள கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர். சிலர், மணமக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விவசாய தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர்், மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்து சாலைக்கு ஓடிவந்து மணமக்கள் வண்டியை நிறுத்தி திருஷ்டி கழித்து வாழ்த்தி வழி அனுப்பினார்.

இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், `வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்டோம். இந்த புது அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது’ என்றனர்.

Tags : Brides , Brides
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்