×

சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி, ஏப்.15:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலான இங்கு குரு, லிங்க, சங்கமம் என்ற மூன்று திருமணிகளோடு இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப லக்னத்தில் காலை 8:30 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத, தருமபுரம் ஆதீன கட்டளை மத் சட்டைநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை காட்டினர். 9.45 மணிக்கு சித்திரை பெருவிழா ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது . அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளிக்கும் திருமுலைப்பால் விழா இன்று தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 18ம் தேதி சகோபரம், 19ம் தேதி திருக்கல்யாணம், 21, 22ம் தேதிகளில் திருத்தேர், 26ம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

கொரோனா கட்டுப்பாடு கும்பாபிஷேக பணிகளால் கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திருமுலை பால் பிரம்மோற்சவ விழா இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

The post சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chitra Festival ,Sirkazhi Chattainatharswamy Temple ,Sirkazhi ,Mayiladuthurai District ,Brahmapureeswarar Temple ,Devara ,Sirkazhi Chattainatharaswamy Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!