×

77,000 கோடி நிலுவையை உடனே செலுத்த வேண்டும்: வோடபோன், ஏர்டெல்லுக்கு அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டண பாக்கி 77,000 கோடியை தாமதிக்காமல் உடனே செலுத்த வேண்டும் என, வோடபோன்-ஐடியா, ஏர்டெல், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. அதை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த ஜனவரி 15ம் தேதி தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 1.47 லட்சத்தை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி வோடபோன், ஏர்டெல், டாடா டெலசர்வீசஸ் நிறுவனங்கள் மனு செய்தன. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், வரும் மார்ச் 17ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைப்பதாகவும், அதற்கு முன்னதாக நிறுவனங்கள் கட்டண பாக்கியை செலுத்தி விட்டு ஆஜராக வேண்டும். தவறினால், நிறுவனங்களின் இயக்குநர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, அன்றைய தினம் நள்ளிரவு 11.59க்குள் நிறுவனங்கள் கட்டண பாக்கியை செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்தது. ஏஜிஆர் கட்டணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வோடபோன்தான். வோடபோன் 53,038 கோடி மேல் செலுத்த வேண்டும். ஏர்டெல் 35,586 கோடி, டாடா டெலசர்வீசஸ் 13,823 கோடி செலுத்த வேண்டும். இதுபோல் பிஎஸ்என்எல் 4,989 கோடி எம்டிஎன்எல் 3,122 கோடி செலுத்த வேண்டும்.

ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 2 தவணைகளில் ₹3,500 கோடி, ஏர்டெல் ₹18,004 கோடி, டாடா குழுமம் 4,197 கோடி செலுத்தியுள்ளன.  இதன்படி மொத்த நிலுவையில் இந்த மூன்று நிறுவனங்களும் சேர்த்து 25,701 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளன. இன்னும் 76,746 கோடி பாக்கி உள்ளது. இந்த தொகையை மேலும் தாமதிக்காமல் உடனே செலுத்த வேண்டும் என மத்திய அரசு மேற்கண்ட மூன்று நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 24, கடந்த பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, கட்டணத்தை தாமதிக்காமல் கூடிய விரைவில் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏஜிஆர் கட்டண பாக்கி
நிறுவனம்    பாக்கி    இதுவரை செலுத்தியது
வோடபோன்-ஐடியா    53,038 கோடி    3,500 கோடி
பாரதி ஏர்டெல்    35,586 கோடி    18,004 கோடி
டாடா டெலிசர்வீசஸ்    13,823 கோடி    4,197 கோடி

Tags : Vodafone , Vodafone, Airtel, Government Notices
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...