போலி பாஸ்போர்ட்டில் வந்த பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பராகுவேயில் கைது

அசுன்சியன்: பிரேசில் கால் பந்தாட்ட வீரர் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டில் பராகுவே வந்ததாக, அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரரும், ஸ்பெயின் நாட்டின் எப்.சி. பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான ரொனால்டினோ, அவரது மூத்த சகோதரர் ராபர்டோ டி அசிசுடன், தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெறும் அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றார். அவர்கள் இருவரும் அங்குள்ள யாட்ச் கோல்ப் கிளப் என்ற நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில், அங்கு சென்ற பராகுவே காவல்துறையினர் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பதாக கூறி சகோதரர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் இன்று காலை 8 மணிக்கு பராகுவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னரும் அவர்கள் இருவரும் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரொனால்டினோ சகோதரர்களின் பாஸ்போர்ட்டில் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவை சரியாக உள்ளன. ஆனால், நாடு மட்டும் பராகுவே என்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரொனால்டினோவின் சகோதரர் ராபர்டோ கூறிய போது, ``மூன்றாவது நபர் ஒருவரை நம்பி ஏமாந்து விட்டோம்’’ என்று கூறினார். ஆனால், சகோதரர்கள் இருவரும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட குய்பா ஏரிப் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு சட்ட விரோதமாக மீன்பிடி விடுதி ஒன்றைக் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் இருவருக்கும் 62.40 கோடி அபராதம் விதித்து, பிரேசில் நாட்டு பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு உலக கால்பந்து போட்டியில் பிரேசில் வெற்றி பெற காரணமாக இருந்த வீரர்களில் ரொனால்டினோவும் ஒருவராவார்.

Related Stories:

>