×

ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி: திமுகவினர் மீது தாக்குதல் காவல் நிலையம் முற்றுகை

சென்னை: சென்னை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது.  இதனை தட்டி கேட்ட திமுகவினர் மீது அதிமுகவினர் கொடூர தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில்  நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு  அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், தலா 8 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். ஒன்றிய  குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்  பதவிகளுக்கு  9 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் இரு கட்சிகளும் சம பலம் இருந்தது. இதனால், கடந்த ஜனவரி 11 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் தேர்தல் நடத்த  போதிய  உறுப்பினர்கள் இன்றி  இரண்டு முறையும்  ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,  மூன்றாவது முறையாக ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக  தேர்தல் நேற்று  நடைபெற்றது.  தேர்தலையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  காலை 10 மணிக்கு உறுப்பினர்கள் அனைவரும்  பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். தேர்தல்யொட்டி,  பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தலைமையில் 500க்கும் மேற்பட்ட  அதிமுகவினர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குவிந்ததால், பரபரப்பு நிலவியது.

தேர்தல் நடைபெறும் அலுவலகத்திற்குள்  அனுமதியின்றி அதிமுகவினர் செல்வதாக கூறி  மாவட்ட துணை செயலாளர் எஸ்.சந்திரன் தலைமையில்  அதிமுக எம்.எல்.ஏ உட்பட  யாரும் தேர்தல் நடைபெறும் பகுதிக்கு செல்லக் கூடாது என்று  திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது போலீசார் கண் எதிரில் அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.   போலீசார் சமாதானப்படுத்தி  கூட்டத்தை கலைத்தனர்.  சிறிது நேரத்தில் அதிமுக நிர்வாகி குமராசாமி என்பவரை தாக்கியவர்களை  கைது செய்ய வலியுறுத்தி   நரசிம்மன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர்     காவல் நிலையம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் நதியாவும், அதிமுக சார்பில் ரஞ்சிதா போட்டியிட்டனர்.   இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரஞ்சிதா  திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்  கார்த்திகேயன் ஆதரவுடன் 9  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளருக்கு 7 கவுன்சிலர்கள் மட்டும் வாக்களித்தனர்.  ஒன்றிய குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்ற ரஞ்சிதா திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மனிடம்  வாழ்த்து பெற்றார்.  

3வது முறையாக ஒத்திவைப்பு
ஆர்.கே,பேட்டை ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக  தேர்தல் மாலை 3 மணிக்கு  நடைபெறும் என்று  தேர்தல் நடத்தும் அலுவலர்   தெரிவித்திருந்த நிலையில்  உறுப்பினர்கள் யாரும்   பங்கேற்காத நிலையில் மூன்றாவது முறையாக  தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றிய குழு துணைத் தலைவர்  தேர்தலும் மூன்றாவது முறையாக  ஒத்திவைக்கப்பட்டது.

Tags : AIADMK ,attack ,union election ,election ,RK Bate ,DMKs RK pettai ,DMK ,victory , RK pettai, AIADMK victory, DMK attack, attack
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...