×

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரவுடிகள் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவன் கைது: தலைமறைவாக உள்ள ரவுடிகளான தம்பா, செந்திலுக்கு வலை

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரவுடிகள் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பரான சிறுவனை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ரவுடிகளான தம்பா மற்றும் செந்திலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்னர். சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவன் சிடி மணி(எ)மணிகண்டன்(35). தென் சென்னையின் பிரபல ரவுடியான இவன் மீது, கொலை, கொலை முயற்சி, ஆள்கட்டதல், கட்டப்பஞ்சாயத்து என 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல் வடசென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிராட்வே வள்ளுவர் நகரை சேர்ந்தவன் காக்கா தோப்பு பாலாஜி(39). இவன் மீது சென்னை மற்றும் புறநகர்களில் 25 கொலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் தென் சென்னை மற்றும் வடசென்னையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதில் காக்கா தோப்பு பாலாஜிக்கும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன் தரப்பிற்கும் வடசென்னையில் யார் பெரிய ரவுடி என்று நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது.

பாம் சரவணன் ஆதரவாளர்கள் தான் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடிகளான கமல்(எ)தம்பா மற்றும் செந்தில். வழக்கு ஒன்றில் பாம் சரவணனை காக்கா தோப்பு பாலாஜி தான் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது பாம் சரவணன் சிறையில் உள்ளான். இதற்கிடையே தனது குருவான பாம் சரவணனை சிறைக்கு அனுப்பிய விவகாரத்தில் காக்காதோப்பு பாலாஜியை பழிவாங்க தம்பா மற்றும் செந்தில் ஆகியோர் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக பாம் சரவணனின் யோசனைப்படி இரண்டு ரவுடிகளும் பல நாட்கள் காக்காதோப்பு பாலாஜியை கொலை செய்ய பின் தொடர்ந்து வந்துள்ளனர். காக்கா தோப்பு பாலாஜிக்கு தற்போது சி.டி.மணி ஆதரவாக உள்ளான். இதனால் காக்கா தோப்பு பாலாஜியை இவர்களால் கொலை செய்ய முடிவில்லை.

இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிடி மணி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கும், காக்கா தோப்பு பாலாஜி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கும் நேற்று முன்தினம் மதியம் வந்தனர். நீதிமன்ற விசாரணை முடிந்தவுடன் சிடி மணி தனது சொகுசு காரில் காக்கா தோப்பு பாலாஜியை ஏற்றி கொண்டு தேனாம்பேட்டை நோக்கி வந்தனர். பல நாட்களாக போட்டு வைத்திருந்த திட்டத்தின் படி ரவுடிகளான தம்பா மற்றும் செந்தில் ஆகியோர் தனது ஆதரவாளர்களான கல்லூரி மாணவர்கள் உட்பட 8 வாலிபர்களை தயார் செய்து நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் 4 பைக்குகளில் சிடி மணி காரை பின் தொடர செய்துள்ளனர்.

வெகு நேரம் காரை 4 பைக்குகள் பின் தொடர்வதை கவனித்த காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சிடி மணி காரை வேகமாக ஓட்டினர். அண்ணாசாலையில் உள்ள சிக்னலில் கார் நிற்கும் போது 4 பைக்கில் வந்த 8 பேர் காரை சுற்றி வளைத்து நின்றனர். உடனே சிடி மணி மின்னல் வேகத்தில் அவர்களிடம் இருந்து தப்பி சென்றார். ஆனால் 4 பைக்கில் வந்தவர்கள் அண்ணா மேம்பாலம் அருகே வந்த உடன் தனித்தனி குழுக்களாக பிரிந்து காரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அண்ணா மேம்பாலத்தில் வந்த கார் திடீரென மேம்பாலத்தின் இடையே வலது புறமாக எதிர் திசையில் வேகமாக சென்று காமராஜர் அரங்கம் அருகே உள்ள மேயர் சுந்தர்ராவ் சாலை வழியாக கடக்க முயன்றனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த பைக்கில் வந்த நபர்கள் மாலை 4 மணிக்கு எதிர்திசையில் சென்ற சிடிமணி கார் மீது 2 நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இருந்து சிடி மணியின் கார் மின்னல் வேகத்தில் சென்றதால் தப்பியது. வெடி குண்டு வீசிய நபர்களும் தங்களது பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, தி.நகர் ராஜாபிள்ளை தோட்டத்தை சேர்ந்த தேவதாஸ்(54) என்பவருக்கு சொந்தமான பைக் என்று தெரியவந்தது. தனிப்படை போலீசார் தேவதாசை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் ஒருவரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பைக்கை வாங்கியதாகவும், தற்போது அந்த பைக்கை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவரது மகன் மகேஷ்(20) ஓட்டி வந்ததும் தெரியவந்தது. பைக்கை ஓட்டி வந்த கல்லூரி மாணவன் மகேஷ், அவருடைய நண்பரான 17 வயது சிறுவன் ஆகியோர் தற்போது தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் உறுதியானது. அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும், பல இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மாயமான கல்லூரி மாணவன் மகேஷ் தனது நண்பரின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது ஒன்றாக இருந்தது. சம்பவத்தின்போது இருவரும் சேர்ந்து தான் ரவுடிகள் வந்த கார் மீது நாட்டு வெடி குண்டு வீசியதை தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.இதையடுத்து இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் மகேஷ் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவனை அதிரடியாக கைது செய்தனர்.

நந்தனம் கல்லூரியில் படித்து வரும் மகேஷ் மற்றும் சிறுவன் ஆகியோர் ரவுடி தம்பா மற்றும் ரவுடி செந்தில் ஆதரவாளர்கள். மேலும், இந்த வழக்கில் மகேஷூடன் படித்து வரும் சில மாணவர்களை பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு பகுதியில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் மகேஷ் மற்றும் சிறுவனை நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் யார் ரவுடிகளை கொலை செய்ய வெடி குண்டு கொடுத்து அனுப்பியது. கல்லூரியில் படிக்கும் உனக்கும் ரவுடிகளுக்கும் என்ன தொடர்பு, முன்விரோதம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரவுடிகளை கொலை செய்ய திட்டம் தீட்டிய புளியந்தோப்பு பிரபல ரவுடிகளான தம்பா மற்றும் செந்திலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

* குண்டு வீச்சு தோல்வியால் துப்பாக்கி சூடு நடத்திய ரவுடிகள்
அண்ணா மேம்பாலம் அருகே சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி வந்த கார் மீது வீசப்பட்ட குண்டு வீச்சு தோல்வியில் முடிந்ததால், அடுத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு குழுவை சேர்ந்த இரண்டு ரவுடிகள் பைக்கில் பின் தொடர்ந்த படியே, முன்னால் வேகமாக தப்பி சென்ற கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் காரில் இருந்த யார் மீதும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கவில்லை. கார் மட்டுமே சேதமடைந்துள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்த கார் சிடிமணிக்கு சொந்தமானது. இதனால் ரவுடி சிடி மணி தரப்பில் இருந்து போலீசாரிடம் தங்களை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய எதிர் தரப்பு ரவுடிகள் மீது புகார் அளித்துள்ளார்.

* யார் அந்த பாம் சரவணன்?
வடசென்னையில் யார் தாதா என்பதில் புளியந்தோப்பை சேர்ந்த பாம் சரவணனுக்கும் காக்கா தோப்பு பாலாஜிக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. பிரபல ரவுடி காதுகுத்து ரவியின் கூட்டாளியான பாம் சரவணன், நாட்டு வெடி குண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். இதனால் தான் பாம் சரவணன் என்று அவரது ஆதரவாளர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். பாம் சரவணன் தற்போது சிறையில் உள்ளான். இவன் மீது 6 கொலை, 8 கொலை முயற்சி, 2 ஆள் கடத்தால் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

பாம் சரவணன் தற்போது சிறையில் இருப்பதற்கு காக்கா தோப்பு பாலாஜிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சிறையில் இருந்து பாம் சரவணன் வெளியே வரும் போது காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் தென் சென்னை ரவுடி சிடி மணியை தீர்த்து கட்ட தனது ஆதரவாளரான ரவுடிகள் தம்பா மற்றும் செந்திலிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளாக கூறப்படுகிறது. அதன்படி தான் 8 நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்து காரில் வந்த இரண்டு ரவுடிகளை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. தம்பா மீது 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : College student , Chennai, Anna Bridge, Rowdies, Car Bombing
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது