×

திருப்புவனம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் கவுன்சிலர்களை கடத்தியதாக கூறி 3வது முறையாக ரத்து: இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டது

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஜன. 11ல் ஒன்றியத் தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திருப்புவனம் ஒன்றியத்தில் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்புவனம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக கூட்டணியில் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணியில் - 5, அமமுக - 1, சுயேச்சை - 1 கவுன்சிலர்கள் உள்ளனர். ஜன. 30ல் மீண்டும் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அதிகாலை 2.30 மணிக்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மீண்டும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் விடுபட்ட இடங்களில்  நேற்று மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்புவனம் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட 10 கவுன்சிலர்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான நோட்டீஸ் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. வேண்டுமென்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கட்சியினர், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

* தலைவர் பதவி வழக்கு நிலுவை: துணைத்தலைவர் தேர்வானார்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலில்  தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக முதலிலும், பின்னர் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெற்றதாகவும் இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முதலில் அறிவிக்கப்பட்ட தேவி மாங்குடிக்கு சாதகமாக ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், தலைவராக யாருமே பதவி ஏற்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சங்கராபுரம் ஊராட்சியில் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 5வது வார்டு உறுப்பினர் பாண்டியராஜன், 1வது வார்டு உறுப்பினர் விவேக் ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் 11 வாக்குகள் பெற்று பாண்டியராஜன் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘துணைத்தலைவர் தேர்தலை நடத்த தடையில்லை’ என ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டுள்ளது.


Tags : union chairman ,Thiruppavanam ,election councilors ,union leader , Thiruppavanam union committee, chairman election, councilor, abducted, canceled 3rd time, night after night
× RELATED குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல்