×

காசிமேடு, புளியந்தோப்பில் பயங்கரம்: கப்பல் மெக்கானிக் உள்பட இரண்டு பேர் அடித்து படுகொலை

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (24). கப்பல் மெக்கானிக். கடந்த மாதம் 28ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கப்பல் பழுதுபார்க்கும் பகுதியில் சாமுவேல் தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய சாமுவேலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சாமுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புளியந்தோப்பு: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 28ம் தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் தலையில் பலத்த ரத்தகாயத்தோடு உயிருக்கு  போராடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா நியூ காலனி பகுதியை சேர்ந்த பெயின்டர் ரூபஸ் முல்லர் (48) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தெரிய வந்ததாவது: இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் ரூபஸ் முல்லருக்கு   அண்ணன்,  தம்பி உள்ளனர்.  பூர்வீக சொத்தை இவர்கள் 3 பேரும் பிரித்து எடுத்துள்ளனர். இதில் ரூபஸ் முல்லரின் தம்பி போவாஸ் (43)  புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் வசித்து வருகிறார்.  கடந்த 28ம் தேதி காலை 8 மணி அளவில் ரூபஸ் முல்லர் முழு குடிபோதையில் தனது தம்பி போவாஸிடம்  சொத்து விற்றதில் தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார்.

அப்போது வாய்தகராறு கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த தம்பி போவாஸ் கற்களை எடுத்து ரூபஸ் முல்லரை  பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரூபஸ் முல்லர் புளியந்தோப்பு புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூபஸ் முல்லர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது தம்பியான போவாஸ் என்பவரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரூபஸ் முல்லர்  சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அடிதடி வழக்கை புளியந்தோப்பு போலீசார் கொலை வழக்காக மாற்றி போவாஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்தனர்.

Tags : Kasimedu ,Terror ,ship mechanic , Kasimedu, ship mechanic, killed , two people
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...