×

தெலங்கானாவைத் தொடர்ந்து ஆந்திராவில் 2 பேருக்கு பாதிப்பு: பரிசோதனைக்கு குவியும் ஊழியர்கள்: ஹோலி கொண்டாட்டம் மோடி, அமித்ஷா தவிர்ப்பு

டெல்லி: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வாடப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவர் ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் தென் கொரியாவிற்கு பணி நிமித்தமாக சென்றார். 10 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த அவர், விமான நிலையத்தில் பரிசோதனை செய்து கொண்ட பிறகு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. உடனே, கிழக்கு கோதாவரி கலெக்டர் முரளிதர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு மருத்துவ குழுவினர் வெங்கடேஸ்வரலுவின் சொந்த ஊருக்கு சென்றனர்.

ஆனால், அங்கு அவர் இல்லை. அவரது மாமியார் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றிருந்தார். அங்கு ஆம்புலன்சில் சென்ற மரு்த்துவ குழு, அவரை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், அவருடன் பழகியவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். விஜயவாடாவை சேர்ந்த ஜெர்மனியில் இருந்து வந்த வாலிபருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவர் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்திய டாக்டர்களுக்கு பயிற்சி அளித்த சீனா
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய டாக்டர்களுக்கு சீன மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட 4 டாக்டர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினர். அப்போது, தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தயாரிப்பது எப்படி, மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, மாஸ்க் அணிவது எப்படி, கைகளை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு கற்றுத் தருவது குறித்து விளக்கமளித்தனர்.

உலகளவில் 3,155 பேர் பலி
கொரோனா வைரசால் சீனாவில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வந்த நிலையில், தற்போது நிலைமை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று 38 பேர் இறந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 2,981 ஆக உள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 80,270 ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா பலி 3,155 ஆக உள்ளது.

ஈரானில் 92 பேர் பலி
சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவில் அதிகம் பேர் பாதித்துள்ளனர். ஈரான், இத்தாலியிலும் இதன் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்நாடுகளில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈரானில் 92 பேர் பலியாகி உள்ளனர். 2,922 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தாலியில் 2,502 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 5,500 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 144 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஜப்பானில் 1000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் 39, பிரான்சில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 7 பேர் இறந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈராக்கில் முதல் பலி
ஈராக்கில் முதல் முறையாக ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 70 வயதான மத போதகர் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்துள்ளார். 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் ஈரான் சென்று திரும்பியவர்கள். இதே போல், ஐரோப்பிய நாடான போலந்திலும் முதல் முறையாக நேற்று கொரோனாவால் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஹோலி கொண்டாட்டம் மோடி, அமித்ஷா தவிர்ப்பு

வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும். தலைநகர் டெல்லியில் பிரதமர் உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இப்பண்டிகைகளை நடத்தி மக்களோடு பங்கேற்பர். வரும் 10ம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், இம்முறை ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த முறை ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளேன்’’ என கூறி உள்ளார்.

அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களும் ஹோலி பண்டிகையில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளனர். ஹோலி மிக முக்கியமான பண்டிகை என்றாலும் கூட முன்னெச்சரிக்கை கருதி இம்முறை மக்கள் பொது இடத்தில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார். மாநில பாஜ தலைவர்கள் யாரும் ஹோலி கொண்டாடங்களை நடத்த வேண்டாம் என ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். டெல்லி வன்முறையால் கட்சி எம்எல்ஏ.க்கள் யாரும் ஹோலி கொண்டாட மாட்டார்கள் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலும் அறிவித்துள்ளார்.

Tags : victims ,Telangana ,Andhra Pradesh Andhra , Andhra, 2 people, vulnerability testing, piling staff
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து