×

நிர்பயா பலாத்கார, கொலை குற்றவாளி பவன் குப்தா கருணை மனு ஜனாதிபதி நிராகரிப்பு: தூக்கிலிட புதிய தேதி கோரி மனு

புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரில் ஒருவனான பவன்குமார் குப்தா அனுப்பிய கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.  டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வருகின்றனர். இதனால், தண்டனை ஜனவரி 22, மார்ச் 3 ஆகிய தேதிகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளிப் போடப்பட்டது.  இந்நிலையில், குற்றவாளிகளில் இதுவரை கருணை மனுவை அனுப்பாத பவன் குப்தா, ஜனாதிபதிக்கு கருணைக் கடிதம் அனுப்பினான். மேலும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்தான். அவனது சீராய்வு மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவனது கருணைக் கடிதத்தை நிராகரித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே, குற்றவாளிகளின் தண்டனை தள்ளிப் போவது குறித்து கூறிய நிர்பயாவின் பெற்றோர், `‘பவன் குமாரின் கருணைக் கடிதம் நிராகரிக்கப்பட்டு விட்டது. அவனுக்கு இன்னும் ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. மற்ற குற்றவாளிகளைப் போல, அவனும் கருணைக் கடிதம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர், இந்த மாதமாவது குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தனர். இதனிடையே, குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி டெல்லி அரசு நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இதற்கான மனுவை கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேர்ந்திர ராணா விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.அதேபோல், குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பிறப்பிக்கக் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகமும் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்தது.

Tags : Pawan Gupta ,rapist , Nirbhaya Balagodarama, Murder and Pawan Pawan Gupta's mercy, President
× RELATED நிர்பயா வழக்கில் சட்ட உதவி...