×

கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 15,013 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..: குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

காந்திநகர்: கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 15,013 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல் அளித்த பதிலில், குஜராத்தில் முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2018-19ம் ஆண்டில் மொத்தம் 1,06,000 குழந்தைகள் பிறந்தன. இவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 71,774 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த குழந்தைகளில் 15,013 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

அதாவது பிறந்த குழந்தைகளில் 21% பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அகமதாபாத்தில் 4,322 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளன. வதோதராவில் 2,362, சூரத்தில் 1,986 குழந்தைகள் உயிரிழ்ந்துள்ளன. பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, என கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, குஜராத்தில் 15,013 குழந்தைகள் இறந்ததற்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். குஜராத்தில் தினமும் 20 பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர், ஆமதாபாத்தில் அதிகபட்சமாக 4322 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றார். மேலும், அகமதாபாத், அமித் ஷாவின் நாடாளுமன்றத் தொகுதி என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, குஜாரத்த்தில் குழந்தைகளின் அழுகை கேட்கப்படுமா? குழந்தை இறப்பு குறித்து யாரேனும் கேள்விகளை எழுப்புவார்களா? இந்த விஷயத்தில் ஊடகங்கள் தைரியம் காட்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : deaths ,infant deaths ,infants ,care units ,Gujarat , கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 15,013 பச்சிளம் குழந்தைகள் உயிழப்பு..: குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...