×

பெரும் திரளாக மக்கள் ஒன்று கூடுவது கொரோனா பரவலை அதிகரிக்கக்கூடும் என்பதால் ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை : பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி : உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டங்களில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் இந்தியாவில் புதிதாக கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், இந்திய மக்களிடையே கரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது.ஏற்கனவே மூவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். எனினும் இந்தியாவில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை

இந்நிலையில் வரும் 9,10 ஆகிய தேதிகளில் வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது,  இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவது கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் அதிகரிக்கக்கூடும்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று ட்வீட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பெரும் திரளாக மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், தாம் ஹோலி பண்டிகை தொடர்பான கொண்டாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள போவதில்லை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.


Tags : celebrations ,Modi ,Holi ,gatherings ,corona spread , Prime Minister, Narendra Modi, Tweet, Holi, Festive, Corona, Virus
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...