×

சட்டம் உருவாக்கப்பட்ட 11 மாதங்களுக்கு பின் லோக்பாலில் புகார் தெரிவிப்பதற்கான விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: லோக்பால் அமைக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்த நிலையில், இதில் புகார் தெரிவிப்பதற்கான விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: லோக்பால் சட்டம் 2013 விதிகளின்படி, பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் அனைத்திலும் நீதித்துறை சாராத முத்திரைதாளுடன் கூடிய பிரமாண பத்திரம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தவறான, அற்பத்தனமான, எரிச்சலூட்டக் கூடிய புகார் தெரிவிப்பவர்களுக்கு 1 லட்சம் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த புகார்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ லோக்பால் அலுவலகத்துக்கு அனுப்பலாம். ஆங்கிலத்தில் மின்னணு முறையில் அனுப்பும் பட்சத்தில், அதனுடைய நகலை 15 நாட்களுக்குள் லோக்பால் அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்னணு முறையில் அனுப்பிய புகாரை லோக்பால் அமைப்பு நிலுவையில் வைக்க கூடாது.

அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ளபடி, இந்தி, குஜராத்தி, அசாமி, மராத்தி உள்ளிட்ட 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் புகார் தெரிவிக்கலாம். ஒரு அமைப்பு, பொது நிறுவனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், கூட்டுத் தொழில் நிறுவனம், அதிகார அமைப்பு, சமூக அமைப்பு, அறக்கட்டளை சார்பிலும் புகார் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில், அந்த அமைப்பின் கையெழுத்திடும் உரிமை பெற்றவர் புகாரில் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். புகார்களை லோக்பால் அமைப்பு 30 நாட்களுக்குள் ரத்து செய்யலாம்.

புகார் மீது எடுக்கப்படும் விசாரணை அல்லது நடவடிக்கை முடியும் வரை, யார் மீது புகார் கூறப்பட்டுள்ளது அல்லது யார் புகார் தெரிவித்தார் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும். பிரதமர், அமைச்சர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் லோக்பாலில் புகார் தெரிவிக்கலாம். பிரதமர் மீதான புகார் விசாரிக்கப்படும் நிலையில், முதல் கட்டத்தில் லோக்பால் தலைவர் தலைமையிலான அமர்வு விசாரிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : government , For 11 months, Lokpal , complaint, issuing rules, central government
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...