×

2014க்கு பிறகு பொருளாதார குற்றவாளிகள் மீது பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ்களில் எத்தனை திரும்ப பெறப்பட்டது?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: கடந்த 2014க்குப் பிறகு பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுகளின் நிலவரம் பற்றி மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன்  கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ள கேள்விகள் வருமாறு:
*பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு தப்பி விடாமல் தடுக்க, அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் லுக் அவுட் நோட்டீஸ்கள் கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதா? அப்படியெனில் அதன் விபரம் என்ன?
* பொருளாதார குற்றங்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக 2014க்குப் பிறகு எத்தனை நபர்கள் மீதான லுக் அவுட் நோட்டீசுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன? அல்லது நீர்த்துப் போகச் செய்யப்பட்டன? எந்த காரணத்தினால் அவை திரும்பப் பெறப்பட்டன?.
* 2014க்குப் பிறகு எத்தனை பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது? அவற்றின் தற்போதைய நிலை என்ன?
* பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியவர்களை நாடு கடத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சக இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில், ‘‘பல்வேறு காரணங்களுக்காக, குற்றங்களுக்காக குடியேற்றத் துறையால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. நோட்டீஸ் அனுப்ப பரிந்துரைக்கும் விசாரணை அமைப்பு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், குடியேற்றத் துறையால் அந்த லுக் அவுட் நோட்டீஸ் திரும்பப் பெறப்படும், ரத்து செய்யப்படும் அல்லது திருத்தம் செய்யப்படும். பொருளாதார குற்றங்கள் சம்பந்தப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் தகவல்கள் மட்டும் தனியாக பராமரிக்கப்படுவதில்லை.வெளிநாடு தப்பிய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்த, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் இயற்றப்பட்டுள்ளது’’  என்றார்.

Tags : Dayanidhi Maran , Economic Criminals, Look Out Notices, How Many, Revoked? , Dayanidhi Maran MP, Question
× RELATED மத்திய சென்னை தொகுதியில் 4வது முறையாக...