மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள கணக்கை பெண்களிடம் ஒப்படைக்கிறேன்: மோடி டிவிட்

புதுடெல்லி: ‘மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைதள கணக்கை பெண்கள் நிர்வகிக்கலாம்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் என சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் செயல்பட்டு வருபவர் பிரதமர் மோடி. இவரை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்த ஞாயிறு முதல், சமூக வலைதள கணக்குகளை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருகிறேன்,’ என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், சமூக வலைதள கணக்குகளில் இருந்து மோடி ஒட்டு மொத்தமாக வெளியேறுகிறாரா? அல்லது ஞாயிறன்று மட்டும் வெளியேறுகிறாரா? என்பது குறித்து குழப்பம் எழுந்தது. பிரதமரின் இந்த டுவிட், 26 ஆயிரம் முறை ரீடிவிட் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து ஹேஸ்டேக்குகளை பதிவிட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘தனது வாழ்க்கை, கடமைகளில் பிறருக்கு ஊக்கம் அளிப்பவர்களாக திகழும் பெண்களுக்கு, இந்த மகளிர் தினத்தில் எனது சமூக வலைதள கணக்குகளை விட்டுத் தருகிறேன்.

இது, பல லட்சம் பெண்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நீங்கள் அதுபோன்ற சாதனைப் பெண்ணா? அல்லது அது போன்ற பெண்களை உங்களுக்கு தெரியுமா? அப்படி இருந்தால், அவர்களின் கதைகளை எனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்,’ என்று பதிவிட்டு “#SheinspiresUs’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இதன் மூலமாக, சமூக வலைதள கணக்குகளில் இருந்து மோடி விலகுவதாக ஏற்பட்ட குழப்பத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories: