கும்பகோணம்: கும்பகோணத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி கிடப்பதுடன் சமூக விரோதிகளின் கூடாரமாக அறநிலையத்துறை ஆணையர் குடியிருப்பு மாறி வருகிறது. மேலும் சேதமடைந்த கட்டிடத்தை விரைந்து இடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்- காரைக்கால் சாலை பொதுப்பணித்துறை மாளிகை அருகில் அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு என பங்களா 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கும்பகோணம் பகுதி உதவி ஆணையராக பணியாற்றுபவர்கள், குடும்பத்துடன் தங்குவதற்காக கட்டி கொடுக்கப்பட்டது. அங்கு உதவி ஆணையர்கள் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக உதவி ஆணையர்கள் அங்கு குடியிருக்கவில்லை. இதனால் உதவி ஆணையர் குடியிருப்பு பங்களா மரம், செடி கொடிகளால் மண்டி இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது.
மேலும் கட்டிடத்துக்குள் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த குடியிருப்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
அதன் அருகில் பொதுப்பணித்துறை விடுதி மாளிகை இருப்பதால் அங்கு விவிஐபிக்கள் மட்டும் தங்குவர். அவர்களும் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து வரும் துர்நாற்றம், கொசுக்களால் நிம்மதியாக இருக்க முடியாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் அக்கட்டிடத்திற்குள் இருந்து பாம்பு போன்ற விஷஜந்துக்கள் வந்து விடுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் அச்சத்துடன் இரவு நேரத்தை போக்குகின்றனர்.
2016ம் ஆண்டு மகாமகத்தின்போது அக்கட்டிடத்தை சீர் செய்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கியிருந்தனர். ஆனால் அதன்பின் பராமரிப்பு செய்யாததால் கட்டிடத்தின் உள்ள அறைகள், சமையல் கூடம், படுக்கை அறை என அனைத்து பகுதியின் மேற்கூரையும் உடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் ஆபத்தான வகையில் உள்ளது.
எனவே அறநிலையத்துறை உதவி ஆணையர் குடியிருப்பு சமூக விரோத செயல் நடைபெறும் இடமாகியுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கூறுகையில், காரைக்கால் சாலையில் உள்ள கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த கட்டிடத்தை பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று விடுகின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.