×

விவசாய நிலத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனங்களை மடக்கி பிடித்து சூறையாடிய மக்கள்

சென்னை: திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் புகழ் பெற்ற அகோர வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோயில் நிலத்தில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை சிலர், திருட்டுத்தனமாக கொட்டி வந்தனர். இதனால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், இதனை யார் கொட்டுகின்றனர் என தெரியாமல் இருந்து வந்தது. இதற்காக, பொதுமக்கள், அந்த இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மருத்துவ கழிவுகளை, ஒரு வேனில் கொண்டு வந்து கொட்டுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அனுமந்தபுரம், சிறுங்குன்றம் ஆகிய கிராம மக்கள் அங்கு சென்றனர். அப்போது, கழிவுகளை கொண்டு வந்த ஒரு மினி வேன் மற்றும் ஒரு பெரிய வேன் ஆகியவற்றை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், விவசாய நிலங்களுக்கு நடுவே இவ்வாறு மருத்துவக் கழிவுகளை கொட்டுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், கழிவுகளை கொண்டு வந்தவர்கள் முறையாக பதில் அளிக்காததால் திரண்டு வந்த பொதுமக்கள் வாகனங்களின் டயர்களை பஞ்சர் செய்து, அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கோயில் நிலத்தில் கொட்டியது சம்பந்தமாக கோயில் செயல் அலுவலருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து அகோர வீரபத்திர சுவாமி கோயிலின் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கொட்டப்பட்ட கழிவுகளில் 80 சதவீதம் ஆணுறைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.வாகனங்களை பொதுமக்கள் பஞ்சர் ஆக்கி விட்டதால் கழிவுகளை அகற்ற முடியாமலும், வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாமலும் அவற்றை கொண்டு வந்தவர்கள் அப்படியே போட்டு விட்டு தப்பி சென்றனர்.

Tags : farmland , People on agricultural land, medical waste, spilled vehicles, dumped and looted
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...