×

பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில் 8ம் வகுப்பு மாணவன் பார்வை இழப்பு? மேடவாக்கத்தில் பரபரப்பு

சென்னை: பள்ளி ஆசிரியை ஸ்கேலால் அடித்ததில் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட சம்பவம் மேடவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை தனம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வேலு. இவர் பள்ளிக்கரணை சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா. துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் (15), சந்தோஷ் (12), ஹரி (10) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கார்த்திக் எட்டாம் வகுப்பும், சந்தோஷ் ஆறாம் வகுப்பிலும் மேடவாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 5ம் தேதி கார்த்திக் வகுப்பின் தமிழ் ஆசிரியை உமா மாணவனை இரும்பு ஸ்கேலால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த ஸ்கேல் கார்த்திக்கின் கண்ணில் பட்டதாக தெரிகிறது. அதில் இருந்து கார்த்திக்கிற்கு கண்வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து, பெற்றோர் சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, டாக்டர்கள் அதிகபட்சமாக ரூ.8000 வரை செலவாகும் எனக் கூறினர். இதற்கு பெற்றோர் “அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. அதனால் தற்போது முதலுதவி சிகிச்சை மட்டும் அளியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, கார்த்திக்கிற்கு கண் வலி அதிகமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த 10ம் தேதி எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் நரம்பு மண்டலத்தில் ரத்த கசிவு இருப்பதால் வலி ஏற்படுகிறது. அதனால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த 12ம் தேதி சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தனர். கடந்த 15 நாட்கள் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு கண் பார்வை திரும்பவில்லை. இதனால் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கடந்த 27ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாய் ரேகா கூறியதாவது, என் மகனுக்கு இயற்கையிலே ஓவியம் வரையும் திறன் உள்ளது. அவன் யாரை பார்த்தாலும் அப்படியே வரைந்து விடுவான். வீட்டு சுவர்களிலும் அவன் சித்தப்பா உருவத்தை வரைந்து வைத்துள்ளான். அதேபோல் படிப்பிலும் நன்றாக படிப்பான். தற்போது அந்த ஆசிரியை அடித்ததில் கண் பாதிக்கப்பட்டு அவனுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வலி தாங்க முடியாமல் அழுகிறான். அவன் படும் வேதனையை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவனுக்கு உரிய சிகிச்சை அளித்து மீண்டும் பழைய நிலைக்கு கண் பார்வை திரும்ப மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுபற்றி பரங்கிமலை கல்வி மாவட்ட அலுவலர் தாமோதரன் கூறுகையில், இதுபற்றி எங்களுக்கு தற்போதுதான் தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.

Tags : student ,school teacher ,Medavakkam , School teacher, Iron Scale, 8th grade, student, loss of vision?
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...