×

குஜராத் கலவரத்தைபோல மாற்ற முயற்சி டெல்லி வன்முறை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து கொல்லப்படுவது மத்திய அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு  கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் வெடித்தது. இதில் 46 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த சிஏஏ பாராட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, `சிஏஏ.வால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. மே.வங்கத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜ. ஆட்சி அமையும்’  என்று பேசினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது:
டெல்லி  கலவரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி, இனப் படுகொலையாகும். இந்த வன்முறைக்காக பாஜ மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத் கலவரத்தைப் போல, மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் கலவரத்தை தூண்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தை கைப்பற்றுவோம் என்று வெட்கமில்லாமல் பாஜ. பேசி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த நேற்றைய கூட்டத்தில் துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜ. தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை?. இவ்வாறு மம்தா கூறினார்.

Tags : government ,Mamata Banerjee ,Delhi ,Central Government , Mamata Banerjee alleges central government's conspiracy in Delhi violence
× RELATED மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2...