×

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால் 3வது குழந்தையின் பிரசவத்திற்கு விடுமுறைகால ஊதியம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படை வீராங்கனையாக பணியாற்றிவரும் ஆயிஷா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. அதற்காக 6 மாதங்கள் பேறுகால விடுப்பும் ஊதியமும் கிடைத்தது. ஆனால், இரண்டாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்புக்கான ஊதியத்தை வழங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை மறுக்கிறது. எனவே, 2வது பிரசவத்திற்கான விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்கான பேறுகால விடுமுறையும், அந்த காலத்திற்கான ஊதியமும் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என்று கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: ஆயிஷா பேகம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் உள்ளவர். இவருக்கு மத்திய சிவில் சர்வீஸ் (விடுமுறை) விதிகள் மட்டுமே பொருந்தும். மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் 2 குழந்தைகளுக்கு மட்டும் 180 நாட்கள் பேறுகால விடுமுறையும் அதற்கான ஊதியமும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கில் வழக்கு தொடர்ந்தவருக்கு ஏற்கனவே முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. 2வது பிரசவத்தில் அவருக்கு 3வது குழந்தை பிறந்துவிடும். எனவே, மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின்படி 3வது குழந்தை பிறப்பிற்கான பேறுகால ஊதியம் வழங்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் ஒன்றன்பின் ஒன்றாகவே குழந்தை பிறக்கும் என்பதால் இரண்டு குழந்தைகளின் பிறப்பிற்காக நேர இடைவெளி உண்டு. எனவே, இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளாகவே அவர்கள் கருதப்படுவார்கள் என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது.

ஆயிஷா பேகம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆயிஷா பேகத்தின் நிலை அரிதானது. அவருக்கு 2வது பேறுகால விடுப்பு மற்றும் அதற்கான ஊதியம் வழங்குவதில் விதி விலக்கு வழங்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின்படி 2வது பிரசவத்திற்கு 180 நாட்கள் விடுமுறை என்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், 2 குழந்தைகளுக்கான பிரசவத்திற்கு மட்டுமே விடுமுறையும், அதற்கான ஊதியமும் என்று விதிகள் கூறுவதால் 3வது குழந்தைக்கு எடுக்கும் பேறுகால விடுமுறைக்கு ஊதியப் பலன் பெற முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இதுபோன்ற அபூர்வமான வழக்குகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விதிகளை தளர்த்துவது குறித்து முடிவு செய்யலாம். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது.

Tags : delivery ,childbirth , First Childbirth, Twin Baby, If Birth, 3rd Child, Maternity Leave, No Pay, Icort Verdict
× RELATED அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி...