×

போட்டோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்தார்: 25 மாணவிகளை மடக்கிய டிக்டாக் காதல் மன்னன் கைது: 9ம் வகுப்பு ஃபெயிலாகி கல்லூரி மாணவர் என கப்ஸா

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கல்லூரி மாணவிகளின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்தும், ஆபாசமாக டிக்டாக் செய்து வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரு ஸ்மார்ட் செல்போன்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கூலிபத்து அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (19). இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்ெகாண்டு பள்ளிக்கு செல்லாமலும் வேலைக்கு செல்லாமலும் ஊரை சுற்றி வருகிறார்.

இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலம். இதுவரை 947 வீடியோக்கள் பதிவேற்றம் செய்த கண்ணனுக்கு 4.18 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இவரது வீடியோக்களுக்கு 1.37 கோடி லைக்குகள் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமான கண்ணன் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தென்காசி அருகே தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருவதாகவும் பெரிய பணக்கார வீட்டு பிள்ளை போன்று தினமும் டிப்டாப்பாக ஆடைகளை அணிந்தும், ஸ்டைலாகவும் இனிக்க, இனிக்க பேசியும் பல கல்லூரி மாணவிகளிடம் பழகி, டிக்டாக் வீடியோவில் நடித்து அவர்களிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனை பயன்படுத்தி எந்த மாணவிக்கும் சந்தேகம் வராமலும் 25க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனி தனியாக சந்தித்து ஆசை வார்த்தை கூறி காதல் வலைகளில் வீழ்த்தியதாகவும் சில மாணவிகளிடம் நட்பு பாராட்டி பழகியதாவும் கூறப்படுகிறது. இவர் ஏராளமான கல்லூரி மாணவிகளுடன் செல்பி, வீடியோ எடுத்துள்ளார்.

இதனிடையே கண்ணனும் அவரது இரு நண்பர்களும் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டனர். இதனையடுத்து கண்ணனின் செல்போனிலுள்ள மாணவிகள் மற்றும் திருமணம் ஆன இளம் பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை அவ்வப்போது ரசித்து பார்த்து வந்துள்ளார். மேலும் சில பணக்கார மாணவிகள், மற்றும் திருமணமான இளம் பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சிலரிடம் ஏராளமான பணத்தை கறந்துள்ளார். இதில் பணம் தராத சில இளம் பெண்களின் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாலிபரின் வலையில் சில தொழிலதிபர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளின் மகள்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணனின் மிரட்டலுக்கு பயந்து சில மாணவிகள் பணத்திற்கு பதிலாக தங்களிடமிருந்து தங்க மோதிரம், வளையல்களை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோரிடம் தங்க நகைகள் தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் ஓரிரு மாணவிகளின் குட்டு பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். சில பெற்றோர் தங்களது மகள்களின் எதிர்கால வாழ்க்கை எண்ணி போலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை.. ஆனால் கண்ணனின் மிரட்டல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் வேறு வழியின்றி தென்காசி எஸ்பி சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்ஐக்கள் தினேஷ்பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.

அவரிடமிருந்து இரு ஸ்மார்ட் செல்போன்கள், மெமரி கார்டுகள், பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணன் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது இரு நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இதில் கண்ணனின் தம்பியும் டிக்டாக் மோகத்தில் சிக்கியுள்ளார். இவரது சதி திட்டங்களுக்கு அவரது தம்பியும் உடந்தையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். யூடிப்பில் சேனல் துவக்கிய கண்ணன்: கண்ணனும் அவரது இரு நண்பர்களும் யூடிப்பில் சேனல் துவக்கி கடந்த பல மாதங்களாக நடத்தி வந்தார். ஆனால் தற்போது ஒரு மாதமாக அந்த சேனல் இயங்குவதை கண்ணன் நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags : Tiktak ,romance king , 25 students , folding dicta , arrested , Abused
× RELATED தங்கையின் கணவரை கைது செய்ய கோரி...