×

உள்நோயாளிகள் பிரிவிற்கு இடம் வழங்காமல் இழுத்தடிப்பு பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி துவங்குவதில் சிக்கல்: அதிகாரிகள் வேடிக்கை

பழநி: உள்நோயாளிகள் பிரிவிற்கு இடம் வழங்காமல் இழுத்தடிப்பதால் பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பழநி பகுதியில் போகர் மட்டுமின்றி ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பழநி மலைப்பகுதியில் உள்ள மூலிகைச் செடிகளைக் கொண்டு பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்து வழங்கி உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் பழநியில் கடந்த 1988ம் ஆண்டு பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள ரைஸ் மில் வளாகத்தில் கல்லூரி செயல்பட்டு வந்தது. புதிய கல்லூரி துவங்க சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தட்டான்குளம் பகுதியில் 41 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. இந்த நிலையில், இக்கல்லூரி திடீரென சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சித்தர் பூமியான பழநியில் சித்த மருத்துவமனை துவங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பழநி எம்எல்ஏவான ஐபி செந்தில்குமார் இதனை தனது தேர்தல் வாக்குறுதியாகவும் தெரிவித்தார். அதன்படி சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசினார். இதன் பயனாக ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி துவக்கப்படுமென அறிவித்தார். அதன்பிறகு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ள 41 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டுச் சென்றார்.

சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென்றால் 60 உள்நோயாளிகளுடன் சித்த மருத்துவமனை சுமார் 1 வருடமாவது செயல்பட்டிருக்க வேண்டும். எனவே உள்நோயாளிகள் பிரிவு துவங்க இடம் தேடும் பணியில் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். அப்போதியில் பொறுப்பில் இருந்து சப்.கலெக்டர் அருண்ராஜ் பழநி தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து பழைய தாசில்தார் கட்டிடத்தை உள்நோயாளிகள் பிரிவாக இலவசமாக பயன்படுத்த அனுமதித்தார். ஆனால், 60 படுக்கைகள் அமைப்பதற்கு தாலுகா அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் மற்றொரு அறையும் தேவைப்படுகிறது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் அறையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. அறையை ஒதுக்கீடு செய்தபின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மருத்துவமனையாக மாற்ற ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியும் தற்போது வரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அறையை ஒதுக்கிய பின்பே, மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் நியமிக்க முடியும். அதன்பிறகு, சில மாதங்கள் செயல்படுத்திய பின்பே, சித்த மருத்துவக்கல்லூரி துவங்க அனுமதி கிடைக்கும். அதிகாரிகளின் அசட்டையால் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பது காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது. ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படவில்லை. அந்த வரிசையில் பழநி சித்த மருத்துவக் கல்லூரியும் சேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பழநி பகுதி மக்கள் உள்ளனர்.


Tags : Siddha Medical College , Inpatient Unit, Palani, Siddha Medical College, Officers
× RELATED நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி...